ஆறுபடை வீடு... ரகசியம் என்ன தெரியுமா?
சித்தர்கள் ஞானிகளின் குருவான முருகனுக்கு ஆறுபடை வீடு நம் முன்னோர்கள் அமைத்ததன் ரகசியம் என்ன தெரியுமா?
மனிதன் இந்த பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆரோக்கியம், உறவுகள், பொருளாதாரம், அபயம் ஆளுமை, ஞானம் ஆகியவை நிறைவாக இருக்க வேண்டும் என சித்தர்கள் சொல்கின்றனர். அதை பூர்த்தி செய்யும் சக்தியுள்ள இடங்களில் ஆறுமுகன் ஆலயங்கள் அறுபடை வீடாக எழுப்பப்பட்டன. ஆரோக்கியத்திற்கு சுவாமிமலை, உறவுக்கு திருப்பரங்குன்றம், பொருளாதார வசதிக்கு சோலைமலை, பாதுகாப்புக்கு திருச்செந்தூர், ஆளுமை திறனுக்கு திருத்தணி, ஞானம் பெற பழநி ஆகிய தலங்களை தரிசிக்கலாம்.
அறுபடை வீடு என்றால் என்ன? வெறுமனே ஆறுவீடுகள் என்று சொல்லாமல் இடையில் ஏன் படை என்ற சொல் வந்தது? இதைப் புரிந்து கொள்ள நாம் நக்கீரரைத்தான் துணைக்கு அழைக்க வேண்டும். அவர்தானே தமிழில் முதன்முதலாக கடவுளைப் போற்றி நூல் எழுதியவர்.
புலவர்கள் பொதுவாக அரசர்களிடம் சென்று பாடிப் பரிசு பெறுவார்கள். அப்படி நல்லபடி பரிசளித்த மன்னர்களைப் பற்றி தம்மைப் போன்ற புலவர்களிடம் சொல்லி அவர்களையும் அங்கு அனுப்புவார்கள். இப்படிச் செய்வதற்கு ஆற்றுப்படுத்துதல் என்று தமிழில் பெயர்.
ஒவ்வொரு புலவரிடமாகச் சென்று விவரத்தைச் சொல்ல முடியாது என்று பொருள் தந்து வாழ்வித்த மன்னரைப் பற்றி நூலாகவே எழுதிவிடுவார்கள். அப்படி எழுதப்பட்ட நூல்களுக்கு ஆற்றுப்படை நூல்கள் என்று பெயர்.
பொருள் கொடுத்த மன்னனைப் பற்றி ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் அருளைக் கொடுத்த கடவுளை நோக்கி மக்களை ஆற்றுப்படுத்துவதற்காக நக்கீரர் எழுதியதுதான் திருமுருகாற்றுப்படை.
செந்தமிழ்க் கடவுளாம் செந்திலங்கடவுளின் செம்மையான பண்புகளைப் பாராட்டி அவனிடம் அருள் பெறலாம் என்று எழுதிய நூல்தான் திருமுருகாற்றுப்படை. தமிழில் எழுந்த முதல் பக்தி நூல் என்ற பெருமையும் இந்த நூலுக்கே உண்டு. சங்கநூல்களில் தொகுக்கப்பட்டு பின்னாளில் சைவத் திருமுறைகளிலும் தொகுக்கப்பட்ட ஒரே நூலும் திருமுருகாற்றுப்படைதான்.
ஆற்றுப் படுத்தும் போது அந்த மன்னன் வாழும் ஊரைச் சொல்லி அங்கு செல்க என்று சொல்வார்கள். ஆனால் இவரோ முருகனை நோக்கி ஆற்றுப்படுத்துகிறார். அப்படி ஆற்றுப்படுத்தும் போது முருகப் பெருமான் குடிகொண்ட ஆறு ஊர்களுக்குச் செல்லுமாறு ஆற்றுப்படுத்துகிறார்.
அப்படி நக்கீரர் குறிப்பிட்ட படைவீடுகள்தான் ஆற்றுப்படை வீடுகள். அப்படி ஆற்றுப்படுத்தப்பட்ட வீடுகள் எண்ணிக்கையில் ஆறாக இருந்ததால் ஆற்றுப்படை என்பது நாளாவட்டத்தில் மறுவி ஆறுபடை வீடுகளாகி விட்டன.
Leave a Comment