கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலத்தில் கந்த சஷ்டி விழா தொடக்கம்...


கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான காஞ்சிபுரம் சுப்பிரமணிய சுவாமி  குமரகோட்டம் முருகன் கோவிலில், கோவில் கொடிமரத்தில் வேல் பொறித்த கொடி ஏற்றப்பட்டு கந்த சஷ்டி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது.

ஓம் எனும் பிரணவ மந்திரத்திற்குப் பொருள் கேட்டு பதில் தெரியாமல் விழித்த பிரம்மனைச் சிறையிட்டுத் தானே படைத்தலை மேற்கொண்டு கையில் கமண்டலம், ருத்ராட்ச மாலையுடன், பிரம்மாவின் கோலத்தில், கோவில் நகரமான காஞ்சிபுரத்திலுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  கோவிலில் தமிழ் கடவுளான முருகப்பெருமான்,குமரகோட்ட முருகனாக அருள் பாலித்து வருகிறார்.

மேலும் கி.பி.16-ஆம் நூற்றாண்டில் இத்தலத்து முருகன் தனக்கு கந்தபுராணம் எழுத ஆலய அர்ச்சகரான கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு "திகட சக்கரம்" எனும் முதல் அடியை எடுத்துச் சொல்ல 10,345 பாடல்கள் கொண்ட கந்த புராணத்தை எழுதியதை பிழை திருத்தி முருகனே உடனிருந்து  அரங்கேற்றிய திருத்தலமாகவும் விளங்குகின்றது.

இத்தகைய சிறப்புடைய இத்திருத்தலத்தில்  ஆண்டுதோறும் கந்த சஷ்டி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது  வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு இன்று குமரகோட்ட முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று கோவில் கொடிமரத்தில் வேல் பொறித்த கொடியினை கோவில் அர்ச்சகர்கள்,சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க,மேளத்தாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகள் வெடி வெடிக்க  பக்தர்கள் முன்னிலையில் ஏற்றி வைக்கப்பட்டு  கந்த சஷ்டி பெருவிழா வெகு விமரிசையாக துவங்கியது.அதன் பிறகு மஞ்சள் பட்டாடை உடுத்தி,பல்வேறு மலர் மாலைகளுடன் காட்சியளித்த முருகப்பெருமானுக்கு இலட்சார்சனையும் நடைபெற்றது.

மேலும் கந்த சஷ்டி பெருவிழாவை ஒட்டி   இன்று பச்சை நிற ஆடையுடன், பச்சை மணி மாலை அணிந்து கொண்டு ஏராளமான பக்தர்கள் சஷ்டி விரதத்தை துவங்கி கோவில் வளாகத்தை 108 முறை சுற்றி வலம் வந்தனர்.

கந்த சஷ்டி பெருவிழாவில் நாள்தோறும் ஆடு,மான், அன்னம்,மயில், குதிரை, பல்லக்கு, உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் குமரகோட்ட முருகப்பெருமான் திரு வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Leave a Comment