இருளிலிருந்து வெளிச்சம் : மகிழ்ச்சி தரும் தீபாவளி
இருட்டு எப்போதுமே நாம் எல்லாருக்கும் பயம் தரும். வாழ்க்கை வெளிச்சமாக ஒளிமயமாக நம்முடைய இந்து தர்மம் பல வழிகளில் வழிகாட்டுகிறது. தர்மம் ஒளி என்றும், அதர்மம் இருட்டு என்பதுமே புராணம் காலம் தொட்டு சொல்லப்படும் செய்தி. பண்டிகைகள் , கொண்டாட்டங்கள், கோயில் திருவிழாக்கள் எல்லாவாற்றிலும் ஒரு பொருள் பொதிந்த அர்த்ததை நம் முன்னோர்கள் வழிகாட்டி சென்றிருக்கிறார்கள்.
புத்தம் புதிய உடைகள், விதவிதமான பலகாரங்கள், புதிய திரைப்படங்கள், தொலைகாட்சிகளில் நிகழ்ச்சிகள் என நம்முடைய பண்டிகைகள் கால ஓட்டத்தில் சுருங்கி போய்விட்டது. இத்தருணத்தில் வெளிச்சம் மிகுந்த தீபாவளியின் புராண பின்னணி குறித்து அறிவோம்.
இந்தியா முழுவதிலுமுள்ள மக்கள், மொழி , ஜாதி , ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி தீபாவளி திருநாளை வெகு உற்சாகமாக கொண்டாடுகின்றனர். அன்னை பவானியின் பூஜையாக மேற்கு வங்காளத்திலும், தாம்பூலத் திருநாளாக மகாராஷ்டிர மாநிலத்திலும் குஜராத்தில் குபேர பூஜையாக புதுக்கணக்குகளை தொடங்கும் திருநாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள், தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் தங்கள் வீடுகளில் அழகியலுடன் நீண்ட வரிசைகளில் விளக்கேற்றிக் கொண்டாடுகிறார்கள்.
தீபாவளி புராண பின்னணி
நரகாசுரன் எனும் அரக்கனைக் கண்ணன் வதம் செய்ததை தான் தீபாவளியாக கொண்டாடி மகிழ்கிறோம். நரகாசுரன் என்ற கொடூர அரக்கன் தேவர்களையும் மனிதர்களையும் அதிக அளவில் துன்புறுத்தி வந்தான். அவனது ஆட்டம் கட்டுக்கடங்காமல் போன நிலையில் தேவர்களின் தலைவனான இந்திரன் , பகவான் கிருஷ்ணனிடம் சென்று முறையிட்டார்.
நரகாசுரனுடன் போர்புரிய சத்தியபாமாவுடன் புறப்பட்டார் கிருஷ்ணன் . இந்த போரில் சக்தியின் அவதாரமாகச் செயல்பட்டாள் சத்தியபாமா.
கிருஷ்ணன் சத்தியபாமா இருவராலும் வீழ்த்தப்பட்டான் நரகாசூரன். இந்த தீய சக்தி அழிந்த நாளையே மக்கள் தீபாவாளியாக கொண்டாட ஆரம்பித்தனர்.
எப்படி கொண்டாட வேண்டும் தீபாவளியை?
தீபாவளி அன்று விடியற்காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து, கங்கா ஸ்நானம் என்ற புனித நீராடுதலை செய்ய வேண்டும். தீபாவளி திருநாளில் எண்ணெயில் லட்சுமியும், நம் வீட்டுத் தண்ணீரில் கங்கையும் பிரசன்னமாகின்றனர் என்பது ஐதிகம், வீட்டுக் கிணற்றின் நீரிலோ அல்லது குழாயில் வரும் நீரிலோகூட தீபாவளியன்று நீராடினால் புனித கங்கையில் நீராடிய பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.
புனித நீராடிய பின்னர் புத்தாடை உடுத்தி இறைவனை வணங்கி, உற்றார், உறவினர், நண்பர்களுடன் நல்ல கருத்துக்கள் பகிர்ந்து கொள்வது நலம். நம் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்னை மகாலட்சுமியின் பேரருள் பொழிய இறைவனை மனதார வேண்டுவோம். தீபாவளி அன்று தொடங்கிய தீப ஒளி வரிசைகள் கார்த்திகை தீபம் வரை நமது அக புற இருளை போக்கி ஒளிமயமானதாக மாற்றுகிறது. இந்த நாட்களில் கிடைக்கப் பெறும் வெளிச்சத்தை வாழ்நாள் முழுவதும் போற்றி பாதுகாத்திடுவோம்.
தீப மங்கள ஜோதி நமோ நம:
Leave a Comment