தீபாவளி அமாவாசை நோன்பு வழிபடும் முறை....
பண்டைய காலம் முதல் தீபாவளி நோன்பு மற்றும் அமாவாசை நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நோன்பு மூலம் குடும்பம் வளம் பெறும் என்பதை ஐதீகமாக கருதி பொதுமக்கள் கொண்டாடி வருகிறார்கள். நோன்பு எடுக்கும் குடும்ப பெண்கள் அதிகாலையிலேயே வீட்டை சுத்தம் செய்து குளித்து முடித்து விரதத்தை தொடங்குவார்கள். மாலையில் அதிரசம் தயார் செய்து அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.
அதன் பின்னர் வீட்டில் சாமிக்கு படையலிட்டு விரதத்தை முடிப்பார்கள். அது வரையில் உணவு எதுவும் சாப்பிட மாட்டார்கள். மேலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அசைவம் சாப்பிட மாட்டார்கள். சாமிக்கு படையலிட அதிரசம் தயார் செய்வதற்கு என்று புதிய விறகு அடுப்பு, சட்டி, பானை என அனைத்தும் புதிதாகவே பயன்படுத்துவார்கள். மேலும் கோவிலுக்கு செல்லும்போது புத்தாடைகளை அணிவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
பூஜை பொருட்கள் வாங்க செல்லும் போது குளித்து முடித்து சுத்தமாக சென்று பூஜை பொருட்களை வாங்கி வருவார்கள். இந்த நோன்பு பண்டிகைக்காக பிரத்யேகமாக புதுவை பெரிய மார்க்கெட் உள்பட அனைத்து மார்க்கெட்டுகளிலும் பூஜை பொருட்கள் விற்கப்படும். குறிப்பாக நோன்பு பண்டிகைக்காக வில்வ பூ அதிகம் விற்பனை செய்யப்படும். மேலும் பல வண்ணங்களில் நோன்பு கயிறு விற்கப்படும். அவரவர்கள் குல மரபுப்படி கறுப்பு இல்லாத நோன்பு கயிறு, சுங்கு வைத்த நோன்பு கயிறு, மணி வைத்த நோன்பு கயிறு என பல விதங்களில் விற்கப்படும்.
அதுபோல் எண்ணிக்கை அடிப்படையிலும் பூஜை பொருட்களை வாங்கி பூஜை செய்வார்கள். மேலும் காய்கறி வகைகளையும் எண்ணிக்கை அடிப்படையிலேயே வாங்கி சமையல் செய்வார்கள். அதிரசம் செய்ய முடியாதவர்கள் பூஜை பொருட்களுடன் வாழைப் பழங்களை வைத்து வழிபடுவார்கள்.
Leave a Comment