தீபாவளி பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும்?
உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடும் பண்டிகை தீபாவளி. இந்துக்கள் மட்டுமின்றி ஜயினர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட மற்ற மதத்தினரும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். வடஇந்தியாவில் 5 நாள் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தீபாவளி என்றாலே புத்தாடை அணிவது, இனிப்புக்கள் பகிர்வது, பட்டாசு வெடிப்பது என்பது தான் பலருக்கும் தெரிந்து ஒன்று. ஆனால் தீபாவளி கொண்டாடுவதற்கு என்று சில முறைகளை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். தீபாவளி என்பது வெறும் கொண்டாட்டத்திற்கான நாள் மட்டுமல்ல நமக்கும் தெய்வீக சக்திக்கும் இடையேயான பந்தத்தை உறுதிப்படுத்தும் விரத நாளும் கூட தான்.
தீபாவளி கொண்டாட்டம் என்பது புத்தாடை வாங்குவதில் இருந்து துவங்குகிறது. ஆனால் புத்தாடை வாங்கும் போது முதலில் முழு முதற் கடவுளான விநாயகருக்கு ஒரு வஸ்திரம் எடுக்க வேண்டும் என்பது தான் முறை. அவரும் நம் வீட்டில் ஒருவர் என்ற நெருக்கத்தை அது ஏற்படுத்தும். நம்மை போலவே தீபாவளியன்று கோவில்களில் உள்ள தெய்வங்களுக்கும் புத்தாடை அணிவிப்பார்கள். அருகில் உள்ள கோயில்களில் இருக்கும் தெய்வ விக்ரஹங்களுக்கு ஏற்றது போல் வஸ்திரங்கள் வாங்கி கொடுக்கலாம்.
நம் வீட்டிற்கு வருபவர்கள், வசதி இல்லாதவர்கள், தீபாவளியை கொண்டாட முடியாத நிலையில் இருப்பவர்கள் என யாருக்காவது நம்மால் முடிந்த அளவிற்கு புத்தாடை, இனிப்பு, பட்டாசு வாங்கிக் கொடுத்து அவர்களும் சந்தோஷமாக தீபாவளியை கொண்டாட செய்யலாம். இது போன்று செய்வதால் நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு, இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த முடியும்.
தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். அனைவராலும் கங்கையில் போய் நீராட முடியாது என்பதனால் தீபாவளியன்று ஒவ்வொரு தேவதைகளும் ஒவ்வொரு பொருளில் எழுந்தருளி, மக்களுக்கு ஆசி வழங்குகிறார்கள். அங்கு கங்கா தேவி, வீடுகளில் உள்ள தண்ணீரில் எழுந்தருளுகிறாள். தீபாவளியன்று அதிகாலை 3 மணி முதல் 5.30 மணி வரை சுடுதண்ணீரில் கங்கா தேவி வாசம் செய்கிறாள். நல்லெண்ணையில் மகாலட்சுமியும், சீயக்காய் போன்றவற்றில் தேவர்களும் வாசம் செய்கிறார்கள்.
இவர்களின் ஆசி நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் தீபாவளி நாளில் அதிகாலையில் வீட்டில் உள்ள பெரியவர்கள் கையால் நல்லெண்ணைய், சீயக்காய் வைத்து, சுடுதண்ணீரில் குளிக்க வேண்டும் என்ற முறை வைக்கப்பட்டது. இப்படி குளிப்பதால் நம்முடைய பாவங்கள் நீங்கி, கங்கையில் குளித்ததற்கு இணையான புண்ணியம் நம்மை வந்து சேர்வதுடன், மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும் என்ற சொல்லப்படுகிறது. மகாலட்சுமியின் அருள் என்றால் வெறும் பணம், காசும் மட்டும் அல்ல. நல்ல அழகான தோற்றப் பொலிவு, தெளிவு ஆகியவையும் மகாலட்சுமியின் அருள் இருந்தால் மட்டுமே பெற முடியும்.
கங்கை ஸ்நானம் முடிந்த பிறகு புத்தாடைகள், பலகாரங்கள், பட்டாசு போன்ற அனைத்தையும் சுவாமி படத்திற்கு முன் படைத்து, வணங்கிய பிறகு பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற வேண்டும். தீபாவளி என்றாலே தீபங்களின் வரிசை என்று தான் அர்த்தம். அதனால் தீபாவளி நாளன்று வீட்டின் பூஜை அறையில் குறைந்தது 5 அகல் விளக்காவது ஏற்ற வேண்டும். சிலரது வீட்டில் ஓம் வடிவம், விளக்கு வடிவம் என கோலமிட்டு அதன் மீது, அதன் மீது விளக்குகளை வைக்கும் வழக்கம் உண்டு. இவ்வாறு விளக்குகள் ஏற்றி, வீட்டில் உள்ள மின் விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டு, தீபத்தின் ஒளியில் இறைவனை கண்டு வழிபட வேண்டும் என்பதே தீபாவளி கொண்டாட்டம் ஆகும்.
Leave a Comment