திருப்பதி குடை ஊர்வலம் செப்டம்பர் 25 ஆம் தேதி தொடங்குகிறது....


திருப்பதி குடை ஊர்வலம் சென்னையில் செப்டம்பர் 25 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்து தர்மார்த்த சமிதியின் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம், அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்...

திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் வில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர்மாலை, வெண்பட்டு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படும்.

தமிழக மக்கள் சார்பாக இந்த ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட்சார்பில், திருமலை வெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகள், சென்னையில் இருந்து ஊர்வல மாக எடுத்துச் சென்று சமர்ப்பணம் செய்யப்பட உள்ளது.

சென்னை பூக்கடை தேவராஜ முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலில் செப்.25-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்குகிறது.

என்எஸ்சி போஸ் சாலை, கோவிந்தப்பன் தெரு சத்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது. யானைக்கவுனி காவல் நிலையம், பேசின் பாலம், யானைக்கவுனி பாலம் ரோடு வழியாக திருக்குடை ஊர்வலம் செல்கிறது.

மாலை 6 மணிக்கு சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, ஸ்டேரன்ஸ் சாலை, ஓட்டேரி, பொடிக்கடை வழியாக சென்று இரவு அயனாவரம் காசிவிஸ்வநாதர் கோயிலை சென்றடைகிறது.

அங்கிருந்து வில்லிவாக்கம், திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர், திருவள்ளூர் வழியாக செப்டம்பர் 30-ம் தேதி காலை திருக்குடைகள் திருமலை சென்றடையும்.

அதன்பின் திருமலை மாடவீதியில் திருக்குடைகள் வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்கலப் பொருட்களுடன், திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பணம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Comment