திருப்பதி போகிறீர்களா.... வெங்கடாசலபதியை தரிசிக்கும் முன்பு இவரை தரிசிப்பதே முறை....


பிருகு முனிவரால் ஒரு முறை மகாவிஷ்ணுவை பிரிந்தாள் மகாலட்சுமி. வைகுண்டத்தில் இருந்து பூலோகம் வந்து கோல்காப்பூரில் தங்கியிருந்தாள்.  மகாலட்சுமியைத் தேடி மகாவிஷ்ணுவும் பூலோகம் வந்து திருமலையில்  ஒரு புற்றில் மறைந்து வாழ்ந்து வந்தார்.

அப்போது ராமாவதாரத்தில் வாக்கு கொடுத்தபடி, வேதவதி என்றப் பெண்ணை (கலியுகத்தில் பத்மாவதி) மகாவிஷ்ணு மணந்து கொண்டார். திருமணச்செலவுக்கு மகாவிஷ்ணுவிடம் பணம் இல்லை. மகாலட்சுமி தான் பெருமாளிடம் தற்போது இல்லையே?. இதனால் திருமணச்செலவுக்கு குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் தங்கக் காசுகளை கடனாகப் பெற்றார் திருமால். அந்த தங்கக்காசுகளை கலியுக முடிவில் தந்து விடுவதாகவும், அதுவரை வட்டியைக் கொடுத்துவிடுவதாகவும் கூறினாராம்.

இந்த நிலையில் மகாவிஷ்ணு, பத்மாவதியை மணந்து கொண்டதை நாரத மகரிஷி மூலம் அறிந்து கொண்ட மகா லட்சுமி, கோல்காப்பூரில் இருந்து திருமலைக்கு வந்தார். அப்போது மகாவிஷ்ணு மகாலட்சுமியை வாஞ்சையுடன் அணைத்து, தமது திருமார்பில் இருத்திக் கொண்டார். திருச்சானூர் என்ற இடத்தில் அலர்மேலுமங்கை என்னும் பத்மாவதி தாயாரை அமர்த்தினார்.

திருமலையில் வெங்கடாசலபதியின் கோவிலுக்கு அருகிலேயே ‘சுவாமி புஷ்கரணி’ என்னும் தீர்த்தக்குளம் உள்ளது. இக்குளத்தின் மேற்குக்கரையின் வடமேற்கு மூலையில் வராகமூர்த்தி ஆலயம் இருக்கிறது. இந்த வராக மூர்த்தியே திருமலையின் ஆதிமூர்த்தி ஆவார். எனவே திருமலையில் வெங்கடாசலபதியை தரிசிக்கும் முன்பு ஆதிவராக மூர்த்தியை தரிசிப்பதே முறையான வழிபாடு ஆகும்.

பின்னர் ‘மகா துவாரம்' எனும் நுழைவு வாசல் வழியாக உள் நுழைந்தால், தங்கத்தால் வேயப்பட்ட ‘ஆனந்த நிலையம்' விமானத்தை தரிசிக்கலாம். அதன் விமானத்தின் கீழ்தான், நின்ற கோலத்தில் மூலவர் வெங்கடாசலபதி அருள்பாலிக்கிறார். விமானத்தின் வடகிழக்கு மூலையில் வெள்ளியால் வேயப்பட்ட திருவாசியோடு, விமான வெங்கடேசர் வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டு வலம் வந்தால் ஆனந்த வாழ்வு அமையும் என்கிறார்கள்.

கருவறையில் ராமானுஜர் சாத்திய சங்கு, சக்கரம் மற்றும் நெற்றியில் மிகப்பெரிய திருநாமப் பட்டையுடன் வேங்கடவன் அருள்கிறார். கருவறை வெளிச்சுற்றில் வரதராஜர், ராமானுஜர், யோக நரசிம்மர் சன்னிதிகளும், பிரார்த்தனை உண்டியலும் உள்ளன.

புரட்டாசி சனிக்கிழமை திருவோண நாளில்தான், திரு மலைக்கு வைகுண்டத்தில் இருந்து மகாவிஷ்ணு எழுந்தருளினாராம். எனவே இத்தலத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளும், புரட்டாசி திருவோண விழாவும் மிகச்சிறப்பாக கொண்டாடப் படுகிறது. நாரத முனிவரின் வழிகாட்டலின்படி புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து, வேங்கடவனை வழிபட்டு பெரும் செல்வமும், வைகுண்டபதவியும் பெற்றான் பீமன்.

இவன் மகாபாரத பீமன் அல்ல. உடல் ஊனமுற்ற குயவன். மண் பானை செய்யும் அவன், புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து வேங்கடவனின் அருள்பெற்றதால், இன்றும் திருமலை வேங்கடவனுக்கு நைவேத்தியம் செய்யும் பிரசாதங்களை மண்பாண்டங்களிலேயே தயாரிக்கிறார்கள். தினமும் ஒரு புதிய மண் சட்டியிலேயே நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமைகளில் இங்கு வேங்கடவனுக்கு வில்வார்ச்சனை செய்கிறார்கள். மகா சிவராத்திரி அன்று இங்கு நடைபெறும் ‘ஷேத்ர பாலிகா’ உற்சவத்தின்போது, பெரு மாளுக்கு வைரத்தில் திருநீற்று நெற்றிப் பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது.

திருச்சானூரில் அலர் எனும் தாமரை மேல் அமர்ந்த திருக்கோலத்தில் பத்மாவதி தாயார் கிழக்குப் பார்த்த வண்ணம் அருள்கிறார். திருச்சானூரில் தனிச்சன்னிதியில் ஸ்ரீகிருஷ்ணரும், சீனிவாசப்பெருமாளும் எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பாகும்.

 



Leave a Comment