கருட சேவையின் மகத்துவம்....
பக்தர்களைக் காப்பதற்காக திருமால் கருடவாகனத்தில் எழுந்தருளுவார். கஜேந்திரனைக் காக்க கருட வாகனத்தில் அதிவேகமாக வந்த நிகழ்வு மூலம் இதை அறியலாம். இதனை "ஆனை துயரம் தீரப்புள்ளூர்ந்து நின்றாழி தொட்டானை' என்கிறார் திருமங்கையாழ்வார்.
கருட சேவையின் போது காக்க நீ வருவாயே கருடனேறி, என்று பக்தர்கள் பாடுவர். ஆசித் எனப்படும் சப்பரத்தின்மேல் சித் எனப்படும் கருடன் வீற்றிருந்து, ஈஸ்வரனாகிய எம்பெருமானைச் சுமந்து வந்து பக்தர்களுக்கு தரிசனமளித்து, சச்சிதானந்தத்தை வழங்குவதே கருட சேவையாகும். கருட சேவையை பெரிய திருவடி சேவை என்றும் கூறுவர். காஞ்சி, திருமலை, திருநாங்கூர், திருவரங்கம், நாச்சியார் கோயில், நவதிருப்பதிகள், திருநாராயணபுரம் போன்ற தலங்களின் கருட சேவைகள் குறிப்பிடத்தக்கனவாகும்.
கருட வியூகம்:
கருடன் பறக்கின்ற நிலையில் படைகளை நிறுத்திப் போரிட்டால் எதிரியின் படைகளைப் பாழ்படுத்தி வெற்றி பெறலாமென்று போர் முறை கூறுகின்றது. இதனை அறிந்த பாண்டவர்கள் ஒருநாள் கருட வியூகம் அமைத்துப் போரிட்டு கெளரவர்களை வென்றனர் என்று மகாபாரதம் கூறுகின்றது.
கருடாழ்வானின் பகவத் தொண்டு:
ஸ்ரீ வைகுண்டத்தில் எம்பெருமானுக்கு பகவத் தொண்டு செய்யும் நித்திய சூரிகளான மூவரில் அனந்தன், விஷ்வக்சேனர்களுடன் கருடாழ்வானும் ஒருவன். ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிரிடாசலம் என்ற விமானத்தை திருமலைக்குக் கொண்டுவந்து அதில் திருவேங்கடவனை எழுந்தருளச் செய்தான். அதுவே கருடாத்ரி என்பதாகும்.
எம்பெருமான் திருக்கோயில்களில் கருவறைக்கு எதிரே கைகூப்பி எம்பெருமானைச் சேவித்த வண்ணம் இருக்கும் கருடபகவானை முதலில் சேவித்து, துவாரபாலகர்களை வணங்கி அனுமதி பெற்று பின்னரே பெருமாளைச் சேவிக்க வேண்டும என்பது நெறிமுறையாகும்.
கருடனும் அஹோபிலமும்:
கருடன், அஹோபிலத்தில் கடுந்தவம் புரிந்து பிரகலாதனுக்கு காட்சியளித்ததைப் போல் தனக்கும் காட்சியளிக்க வேண்டுமென்று ஸ்ரீ நரசிம்மரை வேண்டினான். நரசிம்மரும், கருடன் வேண்டுக்கோளுக்கிணங்கி ஜ்வாலா நரசிம்மராகக் காட்சி கொடுத்தருளினார்.
கருட புராணம்:
ஸ்ரீமந் நாராயணன் கருடபகவானுக்கு உபதேசம் செய்ததால் இது கருடபுராணம் என்று வழங்கப்படுகிறது. உலக மக்கள் முதலான அனைத்து உயிர்களும் தாங்கள் செய்யும் தீவினைக்களுக்குரிய பலனை உயிர் பிரிந்தபின் அனுபவிப்பர். எந்த பாவங்களுக்கு என்னென்ன தண்டனை என்பதை கருட புராணம் கூறுகிறது. இந்நூலினைப் படித்தால் தவறு செய்ய அஞ்சி நல்வழிப்படுவர்.
Leave a Comment