விநாயகருக்கு கொழுக்கட்டை படைப்பது ஏன்?
பிள்ளையாருக்கு கோவில்கள் எண்ணில் அடங்காதவை. அரசமரம், வன்னிமரம் என மரத்தடியில் குடி கொண்டிருப்பவர் விநாயகர். முழுமுதற் கடவுளான விநாயகரின் முக்கியமான விழா விநாயகர் சதுர்த்தி ஆகும். இந்த விழா ஆவணி மாதத்தின் வளர்பிறை நாள் அன்று கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு என்னென்ன உணவு பொருட்களை நிவேதனம் செய்யலாம்? என்பதை பார்க்கலாம்..
உணவு பிரியரான விநாயகருக்கு படைக்கும் பொருட்களில் கூட அர்த்தம் இருக்கிறது. அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும்.
அவருக்கு பிடித்த இலைகள் அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை. பிடித்த மலர்கள், தும்பைப்பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ, செம்பருத்திப்பூ, எருக்கம்பூ. இவற்றில் ஏதாவது ஒன்றை விநாயகருக்கு சூட்டி வழிபடலாம்.
விநாயகருக்கு கொழுக்கட்டை படைப்பது ஏன்?
விநாயகர் சதுர்த்தி நாளில், பிள்ளையாருக்கு செய்யப்படும் பிரசாதங்களில் முக்கியமானது, 'மோதகம்" மற்றும் கொழுக்கட்டை. தேங்காய், வெல்லப்பாகு, அரிசி மாவால் செய்யப்படும் இந்த நிவேதன பொருளில் ஒரு உண்மை உள்ளது.
மோதும் அகங்கள் இருக்கக்கூடாது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்திதான் மோதகத்தை படைக்கின்றோம்.
மேல் தோலாக இருக்கும் மாவு பொருள், அண்டம்;. அதன் உள்ளே இருக்கும் பூரணம், பிரம்மம். நமக்குள் இருக்கும் பூரணம் போன்ற நல்ல பண்புகளை மூடி மறைப்பது, மாயை. இந்த மாயை-யை அகற்றிவிட்டால், பூர்ணத்துவமான நல்ல பண்புகள் வெளியாகும். இதுவே, கொழுக்கட்டை உணர்த்தும் தத்துவம்.
கொழுக்கட்டையின் கூர்மையான முன் பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதை தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதை தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதை சொல்லாமல் சொல்கிறது.
Leave a Comment