திருப்பதியில் பிரம்மோற்சவ நாட்களில் 9 லட்சம் லட்டுக்கள் இருப்பு வைக்க முடிவு...
பிரம்மோற்சவ நாட்களில் ஒன்பது லட்சம் லட்டுக்கள் இருப்பு இருக்கும் வகையில் லட்டு உற்பத்தி செய்ய தேவஸ்தான முடிவு செய்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, அடுத்த மாதம் 27 ஆம் தேதி துவங்கி அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வரை 9 நாட்கள் திருப்பதி மலையில் நடைபெற இருக்கும் ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
பிரமோற்சவ ஏற்பாடுகள் பற்றிய ஆலோசனை கூட்டம் திருப்பதி மலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தேவஸ்தானத்தில் உள்ள பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுப்பா ரெட்டி, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ சாமி உச்சவங்கள் நான்கு மாட வீதிகளில் நடைபெற உள்ளன. எனவே பிரம்மோற்சவ சுவாமி உற்சவங்களை தரிசிக்க ஏராளமான அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட வாகன சேவை அக்டோபர் மாதம் முதல் தேதி என்று நடைபெற உள்ளது. அன்றைய தினம் புரட்டாசி மாத சனிக்கிழமை என்பதால் கருடவாகன சேவையை தரிசிக்க தமிழகத்திலிருந்து ஏராளமான அளவில் பக்தர்கள் வருவார்கள். அதற்கு தகுந்தாற்போல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பதி மலையில் உள்ள வெளிவட்ட பாதையில் பிரமோட்சவத்திற்காக வரும் பக்தர்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு காலை 6 மணிக்கு துவங்கி நள்ளிரவு ஒரு மணி வரை இலவச உணவு வழங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர பிரம்மோற்சவம் நடைபெறும் ஒன்பது நாட்களும் 9 லட்சம் லட்டுக்கள் எப்போதும் இருப்பு இருக்கும் வகையில் லட்டு உற்பத்தி செய்யவும்,திருப்பதி மலையில் உள்ள முக்கிய பகுதிகளை ஒளிரும் சரவிளக்குகளால் அலங்கரிக்கவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கருட வாகன சேவை நடைபெறும் அக்டோபர் முதல் தேதி அன்று திருப்பதி மலை பாதையில் இருசக்கர மோட்டார் வாகன பயணம் அனுமதிக்கப்படாது. எனவே பக்தர்கள், உள்ளூர் பொதுமக்கள் ஆகியோர் அன்றைய தினம் திருப்பதி திருமலை இடையே பேருந்துகள், கார்கள் மற்றும் டாக்ஸிகள் ஆகியவற்றில் மட்டுமே பயணிக்க முடியும்.
அடுத்த மாதம் 27 ஆம் தேதி பிரம்மோற்சவ துவக்க நாளன்று முதல் ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு ஆந்திர அரசின் சார்பில் பட்டுவஸ்திர சமர்ப்பணம் செய்ய இருக்கிறார். அன்றைய தினம் மட்டும் இரவு 9 மணிக்கு துவங்கி மாடவீதிகளில் சாமி ஊர்வலம் நடைபெறும். மற்ற எட்டு நாட்களும் காலை 7:00 மணிக்கும், இரவு 9:00 மணிக்கும் சாமி ஊர்வலம் துவங்கி நடைபெறும். திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக கரோனா நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அப்போது கூறினார்.
Leave a Comment