புட்லூர் அங்காளபரமேஸ்வரி திருக் கோயிலின் சிறப்புகள்
சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில், புட்லூர் கிராமத்தில் பூங்காவனத்தம்மன் என்கிற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக் கோவில் அமைந்துள்ளது. புற்றுருவாக பெண் உருவத்துடன் இயற்கையாக ஒரு நிறைமாத கர்ப்பிணி படுத்திருப்பது போல் இங்கு தோன்றியுள்ளார் அங்காள பரமேஸ்வரி.
சக்தியும் சிவனும் ஒரே இடத்தில் சேர்ந்து இருப்பதால் அம்மன் எதிரே நந்தி பகவான் இருப்பது இந்த ஆலயத்தின் சிறப்பு.மற்ற அம்மன் ஆலயங்களில் எதிரே சிம்ம வாகனம் இருக்கும்.ஆனால் இங்கு சக்தியும் சிவனும் சேர்ந்து உள்ளபடியால் எதிரில் நந்தி பகவான் உள்ளது.ஆகையால் சிவனுக்கு பிரதோஷ வழிபாடும் அம்மனுக்கு ஆடு கோழி பலியிடுவதும் வழக்கத்தில் உள்ளது.
நிறைமாத கர்ப்பிணிக் கோலத்துடன் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் அன்னையானவள், தன்னை நாடிவந்து வணங்கும் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படுத்தும் பேற்றினையும், குழந்தை வரத்தினையும் வழங்குகின்றாள் என்பது நம்பிக்கை.எனவே,தான் இத்திருத்தலத்திற்கு வந்து வளைகாப்பு செய்து கர்ப்பிணிப் பெண்கள் வழிபாடு செய்கின்றனர்.
வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை,வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக் கிழமைகளிலும், மாதந்தோறும் அமாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களிலும் ஏராளமான பக்தர்கள், இத்திருத்தலத்திற்கு வந்து அன்னையினை வணங்கி அருள் பெற்றுச் செல்கிறார்கள்.
மூலவர் மற்றும் உற்சவராக அருள்மிகு அங்காளபரமேஸ்வரி உள்ளார்.கோவிலில் தலவிருட்சம் வேம்பு மரம் உள்ளது.முருகர் வினாயகர் தட்சினமூர்த்தி துர்கை உள்ளிட்ட பிரகார தெய்வங்கள் திருக்குளம் உள்ளது.
அம்மனுக்கு கூழ்வார்த்தல் பொங்கல் வைத்தும் அங்கபிரதசனம் செய்தும் தொட்டில்,தாலி காணிக்கை செய்தும் தங்கள் நேர்த்திகடனை செலுத்துகின்றனர். முக்கிய திருவிழாக்களாக மாசி அமாவாசை,மயான கொள்ளை போன்ற விழாக்கள் நடைபெறுகிறது.
அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் குழந்தை பாக்கியம் வேண்டி வருபவர்கள் அம்பாளின் அருளைப் பெற்ற பிறகு ஐந்தாம் மாதம் ஐந்து வகையான சாதம்,புடவை,ஜடை,மாலை,வளையல் மற்றும் அம்பாளுக்கு தேவையான பூஜை செய்கின்றனர்.மேலும்,அவர்கள் அம்பாள் அருள் பெற்ற பிறகு மாங்கல்யம் சாற்றுவது ஐதீகம்.
Leave a Comment