திருமலை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் பலவித வாகனங்களில் தாயார்களுடன் உற்சவமூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறும் விதமாக, மீன லக்னத்தில் பிரம்மோற்சவம் கொடி ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி பிரம்மாண்ட நாயகனின் பிரம்மோற்சவத்திற்காக புதிய மஞ்சள் துணியில் கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடியை நான்கு மாடவீதியில் உற்சவ மூர்த்திகளுடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. பின்னர் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி முன்னிலையில் பட்டாட்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கருட கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. பிரம்மோற்சவம் முன்னிட்டு மலைப்பாதைகளில் 24 மணி நேரமும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது. மேலும் இன்று தொடங்கியுள்ள பிரம்மோற்சவம் அக்.1-ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. பிரம்மோற்சவம் சமயத்தில் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் 4 ஆயிரம் அறைகள் வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. பிரம்மோற்சவத்துக்காக தேவஸ்தானம் ரூ. 9.5 கோடி செலவு செய்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்கள் வாகன சேவையுடன் ஏழுமலையானை விரைவாக தரிசனம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Leave a Comment