குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா துவங்கியது....


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவையொட்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து காணிக்கை வசூலித்து கோயிலில் வழங்குவர். இந்தாண்டுக்கான தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் காலை 8 முதல் 9 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. மாலை 3 மணி முதல் 6 மணி வரை சமயசொற்பொழிவுகளும், இரவு 8 மணிக்கு கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், இரவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. 23ம் தேதி இரவு ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும், 24ம் தேதி இரவு மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும், 25ம் தேதி இரவு காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்திலும், 26ம் தேதி இரவு சிம்மவாகனத்தில் மகிசா சுரமர்த்தினி திருக்கோலத்திலும் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 27ம் தேதி மாலை 4.30 மணிக்கு மகிசாசூரன் வீதியுலாவும், இரவு 9 மணிக்கு பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதியுலாவும், 28ம் தேதி இரவு 9 மணிக்கு கமலவாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்திலும், 29ம் தேதி இரவு அன்னவாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும் அம்மன் வீதியுலா நடக்கிறது. 30ம் தேதி காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணி மற்றும் அதிகாலை 3.30 மணி வரை கடற்கரை வளாகத்தில் சிறப்பு பக்தி இன்னிசை, இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சிம்மவாகனத்தில் அம்மன் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி மகிசா சூரசம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.



Leave a Comment