ஐஸ்வர்யங்களை அருளும் சோமவார விரதம் துவக்கம்


சிவ விரதங்களுள் அதி சிறப்பானது கார்த்திகை மாத சோமவார விரதம். முப்பத்து முக்கோடி தேவர்களில் உத்தமமானவர் சிவபெருமான். சக்தி தேவியருள் உத்தமியாய் திகழ்பவள் உமாதேவி (பார்வதி). கார்த்திகை சோமவாரத்தில் (திங்கள் கிழமைகளில்) பகல் உணவு தவிர்த்து இரவில் மட்டும் உணவு உட்கொண்டு சிவனை பூஜிப்பவர்களுடைய பாவம் தீயிலிட்ட பஞ்சுபோல் ஆகிறது. 

சிவனை அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபடுவோர் தாம் மட்டுமின்றி தமது முன்னோர்களும் பாவ விமோசனம் பெற வழி செய்கின்றனர் என்கிறது கார்த்திகை மகாத்மியம்.கார்த்திகை மகாத்மியத்தியல் இது சம்பந்தமாக ஒரு கதை கூறப்பட்டுள்ளது. அதில், காஷ்மீர் தேசத்தில் ஓர் அந்தணர் ஒருவர் வசித்து வந்தார். அவர் தன் மகளுக்கு ஒரு மறையவனை (மாப்பிள்ளையை) மணமுடித்தார். 

திருமணமான பின்னும் அந்த பெண் ஆட்டம், பாட்டம், அலங்காரம், கொண்டாட்டம் என உலக மாயையில் உழன்றாள். கணவரோடு சண்டையிட்டாள். தீயவழிக்கு சென்றாள். இறுதியில் கணவனையே கொன்றாள்.நாளடைவில் அவளது அங்கங்கள் தளர்ந்தன. அழகு குறைந்தது.

நோய்வாய்ப்பட்டு இறுதியில் உயிரிழந்தாள். நரகம் சென்று துன்பப்பட்டாள். பல்வேறு பிறவிகளை எடுத்த அவள் நாயாக பிறந்தாள். அந்த நிலையில் அவள் ஒரு அந்தணர் வீட்டின் வாசலில் கிடந்த உணவை சாப்பிட்டாள். அது கார்த்திகை சோமவார பூஜை செய்து அந்தணர் இட்ட பலி. எனவே அதனை உட்கொண்ட நாய்க்கு முன்ஜென்ம நினைவுகள் வந்தன. பின்னர் பேசத் தொடங்கியது.அதை  பார்த்து அந்தணர் வியந்தார். நாயோடு பேச்சு கொடுத்தார் அந்தணர். எனக்கு பூர்வஜென்ம நினைவு வரக்காரணம் யார்? என்ன என்று அந்த நாய் அந்தணரிடம் கேட்டது. அதற்கு அவர் சோமவார பூஜா பலியை உண்டாய். எனவே பூர்வஜென்ம ஞானம் வந்தது என்றார். 

ஞானம் வந்த நாய் சுவாமி நீங்கள் தான் என்னை கரையேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது. கருணை மிகுந்த அந்தணர் சோமவார பூஜை பலனை நாய்க்கு தந்தார். பலனை பெற்ற நாய் பேரழகு உருவம் எடுத்து சொர்க்கலோகம் சென்றது என கூறுகிறது கார்த்திகை மகாத்மியம்.சோமவார விரதத்தை காசி, பாபநாசம், குற்றாலம் போன்ற புண்ணிய தலங்களில் கடைபிடித்தால் பலன் அதிகம். மதுரை நகரில் சோமசுந்தர கடவுளை வழிபடுவது கோடிமடங்கு புண்ணியம் தரக்கூடியது. சிவபெருமான் உமையாளோடு கூடியிருப்பதால் சோமன் என்றும் சிவபெருமானை அழைப்பர். வாரம் என்றால் கிழமை என்று அர்த்தம். சோமவாரத்தில் அமாவாசையும் சேர்ந்து வருவது அமா சோமவாரம் என்று கூறப்படுகிறது. இது மிகவும் விசேஷம். நீதி நெறிப்படி தேடிய பொருள் கொண்டு சோமவார விரதமிருந்தால் பலன் அதிகம் என்கிறது திருவிளையாடல் புராணம்.

கார்த்திகை அல்லது மார்கழி மாதத்தில் சுக்ல பட்சத்தில் சோமவார விரதம் தொடங்கலாம். அந்த மாதங்களில் இரண்டு அமாவாசை இருக்க இருக்க கூடாது. விரதம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் :ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு உண்பதை தவிர்த்து வெறும் தரையில் தூங்க வேண்டும். திங்கட்கிழமை காலை சோமசுந்தர கடவுளை தியானிக்க வேண்டும். அன்றாட கடமைகளை செய்து முடிக்க வேண்டும். வில்வமரத்தின் அடியில் இருக்கும் மண், தர்ப்பை புல், பசுஞ்சாணம், எள் ஆகியவற்றை தலையில் வைத்து கொண்டு தர்ப்பை புல்லில் செய்யப்பட்ட மோதிரம் தரித்த கையுடன் மனம், வாக்கு, சாயம் என்ற மூன்றும் ஒரு நிலையில் இருக்க இறைவனை தியானித்து இவ்வுலகில் உள்ள எல்லா தீர்த்தங்களிலும் நீராடிய பலனை எனக்கு தர வேண்டும் என்று வேண்டுதலுடன் நீராட வேண்டும்.

பின்தலை, உடலை துவட்டி கொண்டு விபூதி பூசி ருத்ராட்சம் அணிந்து வெள்ளை மந்தாரம், முல்லை, மல்லிகை, இருவாட்சி, வெண்தாமரை முதலிய வெள்ளை மலர்களையும், வில்வம், அருகு, அட்சதை முதலியவற்றை எடுத்து கொண்டு கோயிலுக்கு செல்ல வேண்டும். சிவாகம முறைப்படி அய்யனையும், உமையாளையும் தரிசிக்க வேண்டும்.சோமவார நாளில் இறைவனின் ஆயிரம் திருநாமங்களை கூறி வில்வத்தால் அர்ச்சித்தால் எல்லா பாவங்களும் அகலும். மணப்பேறு, மகப்பேறு, கல்வி, செல்வம், வாக்கு என சகல ஐஸ்வர்யங்களுமு கிட்டும் என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை! நற்பலன்களை தருவது கார்த்திகை சோமவார விரதமே!சோமவார விரதத்தை கடைபிடிப்போம், விமோசனம் பெறுவோம்.
 



Leave a Comment