அறியாமை அகற்றும் லிங்கோத்பவர்
பகவான் மகாவிஷ்ணுவுக்கு பத்து அவதாரங்கள் என்றால் சிவபெருமானின் அவதாரங்களில் 25 முக்கியத்துவம் பெற்றவை.அவற்றுள் முக்கியமான ஒன்று லிங்கோத்பவர். சிவபெருமான் தான் லிங்கம் என்றாலும், அந்த லிங்கத்துக்குள்ளேயே, தலை, கால், கை என்று எல்லா அங்கங்களோடும் திருவுருவைத் தான் லிங்கோத்பவ மூர்த்தியாக வணங்குகிறோம்.
மும்மூர்த்திகளும் சேர்ந்து நடத்திய திருவிளையாடலால் உருவான புதிய மூர்த்தியே லிங்கோத்பவமூர்த்தி ஆகும். பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் மூண்ட பொழுது, சிவன் நெருப்பு பிளம்பாக தோன்றி தன்னுடைய அடியையோ அல்லது முடியையோ காணுபவரே பெரியவர் என்று கேட்டதில் , உருவான வடிவமே லிங்கோத்பவர்.
சிவ பெருமானின் திருவடியை அடியைக் காண திருமால் வராக (பன்றி) வடிவெடுத்து நிலத்தினை குடைந்து சென்றார். பிரம்மா அன்ன வடிவெடுத்து பறந்து சென்று கங்கை குடி கொண்ட முடியைக் காண சென்றார். கோடானகோடி ஆண்டு பயணம் செய்தும் லிங்கோத்பவரின் அடியை காண இயலாமல் திருமால் திரும்பினார், பிரம்மா, தாழம்பூவை பொய் சாட்சியாக வைத்து முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார். அதனால் பிரம்மாவிற்கு தனித்த ஆலயங்கள் இல்லாமல் போனது என்ற வரலாற்றை புராணங்கள் சொல்கிறது.
அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவபெருமான் தன்னுடைய இடப்பாகத்தில்ஒவ்வொரு சிவாலயத்திலும் உள் பிரகாரச் சுற்றில் கருவறைக்கு பின்புறம், மூலவருக்குச் சரியாக பின்னால் எதிர்ப்புறம் நோக்கிய சிற்பமாக லிங்கோத்பவர் இருக்கிறார்.
இந்த லிங்கோத்பவமூர்த்தியை சிவாலயத்தில் மட்டுமின்றி, பிற ஆலயங்களிலும், மூலக் கருவறையின் பின்னுள்ள கோஷ்டத்தில் (திருப்பிறையில்) பார்க்க முடியும். மும்மூர்த்திகளின் அருளும் ஒரே திருவுருவில் அமைந்துள்ள லிங்கோத்பவரை வழிபட்டு வருவது சிறப்பாகும். லிங்கோத்பவமூர்த்தியை மாலையில் இருட்டத் துவங்கும் நேரத்திலும்; பவுர்ணமி தினங்களில் கூடுதலான நேரமும் வழிபடுதல் விசேஷம். இதன் மூலம் ஒவ்வொரு நாளும் நாம் ஏதோ சாதித்து விட்டதாக எண்ணுகின்ற கர்வம் அழியும்.
இரண்யகசிபுவின் அறியாமையைப் போக்குவதற்காக, தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மமூர்த்தியைப் போல, நம் அறியாமையையும் அகந்தையையும் வாழ்வில் ஏற்படும் கர்வங்களை அழித்து வழிகாட்டும் திருவுருவமாக விளங்கும் லிங்கோத்பவரை வணங்கி அமைதியான வாழ்வை பெறுவோம்.
பகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும்
லிங்காஷ்டகம் மந்திரம்
பிரம்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜது: க்க நிநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம் - நான்முகப் பிரம்மனாலும், முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும், எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்.
நிர்மல பாஸித ஸோபித லிங்கம் - குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்.
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் - பிறப்பு - இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.
இந்த லிங்காஷ்டக ஸ்லோகத்தை சிவபூஜையின் போது சிவபிரானின் திருவுருவப் படத்திற்கு நாகலிங்க மலர்களைச் சூடி இம்மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகங்களைக் கூறினால் நற்பலன்கள் ஏற்படும்.
Leave a Comment