கௌதம புத்தர் அவதரித்த வைகாசி பௌர்ணமி 


வைகாசி முதல் நாளில் கங்கை நதியில் நீராடினால் ஏழேழு ஜென்மங்களில் செய்த பாபங்கள் நீங்கும் என்கிறது சாஸ்திரம். கங்கையில் நீராட வசதி இல்லாதவர்கள் தங்கள் ஊருக்கு அருகில் உள்ள புனித நீர் நிலைகளில் வடக்கு நோக்கி கங்கையை பிரார்த்தித்து நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.

இம்மாதத்தில் புனித நதியில் நீராடி மஹாவிஷ்ணுவை துளசி பத்ரங்களால் பூஜை செய்தால் நற்பேறுகள் பல பெறலாம் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.

 வைகாசி மாதத்தில் பல அவதாரங்கள் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. வைகாசி பௌர்ணமி அன்று சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியானது ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் தோன்றியது. ஆதிசக்தியானவள் அந்த ஆறு குழந்தைகளை அரவணைத்து ஓருடல் ஆக்கினாள் என்பது புராணம். அக்குழந்தையே ஆறுமுகனான முருகப்பெருமான். 

வைகாசி சுக்ல சதுர்த்தசியில்தான் மஹாவிஷ்ணு தன் பக்தன் பிரகலாதனுக்காக ஒரு நொடிப்பொழுதில் நரசிம்ம அவதாரம் எடுத்தார்.

கௌதம புத்தர் அவதரித்தது ஓர் வைகாசி பௌர்ணமி என்று வரலாறு சொல்கிறது. அவர், கயாவில் போதி மரத்தடியில் ஞானம் பெற்றதும் வைகாசி பௌர்ணமியே.

 வைகாசி மாத மூலநட்சத்திர நாள் திருஞானசம்பந்தரின் திருநட்சத்திர தினம். அன்று ஆச்சாள் புரத்தில் திருஞானசம்பந்தர் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

 வைகாசி விசாகத்தில் எமதர்மராஜன் அவதரித்ததாக புராணம் கூறுகிறது. ஆகையால் எமதர்மராஜன் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வாஞ்சியம் மற்றும் திருச்சி மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள திருப்பைஞ்ஞீலி திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.



Leave a Comment