பரசுராமர் அவதரித்த அட்சய திருதியை சிறப்பு....
நான்கு மறைகளையும் கற்றறிந்த வேத விற்பன்னர் ஜமதக்னி. அவரது கற்பிற் சிறந்த மனைவி ரேணுகா. நாள்தோறும் கணவர் துயில் எழுமுன்னரே ரேணுகா எழுந்து, பர்ணசாலையின் முன்வாசலை சுத்தம் செய்துவிட்டு, மாக்கோலமிட்டு விட்டு, கணவரின் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டு, கங்கைக் கரைக்கு செல்வாள்.
ஆற்றில் நீராடிவிட்டு, ஆதவனை வணங்கி விட்டு, ஆற்று மணலை கைகளாலேயே பிசைந்தெடுத்து, ஒரு குடத்தை வடிவமைப்பாள். அவளது கரம் பட்டவுடனேயே, ஆற்று மணல் களிமண்ணாக மாறி, குடமாகவும் உருவெடுக்கும். கற்புக்கரசியான அவளது கரங்களுக்கு அத்தனை சக்தி. ஒருநாள் பொழுது புலரும் நேரம் நெருங்கிவிட்டதால், ரேணுகா அவசர அவசரமாக எழுந்தாள். விடிவெள்ளியைக் காண்பதற்காக வானத்தை அண்ணாந்து பார்த்தவாறே ஆற்றை நோக்கிப் புறப்ப ட்டாள். அப்போது வான வீதியில் சித்திர ரதன் எனும் கந்தர்வன், பறந்து சென்று கொண்டிருந்தது ஒரு கணம் அவளது பார்வையில் பட்டது. அவ்வளவுதான். அந்த கந்தர் வனின் அழகு சொரூபம், கம்பீரம்... அவளுடைய சிந்தை நிலைகுலைந்தது. அவள் உடல் நடுங்கியது. தன் எண்ணம் சிதறியது நியாயம்தானா என்று பதறினாள். இருப்பினும், அவள் வழக்கம்போல் நீராடிவிட்டு, ஆற்று மணலைப் பிசைந்தாள்.
தினமும் சட்டென உருவாகிவரும் மண்குடம் அன்று உருக்குலைந்தது. தன் மனத்தடுமாற்றத்துக்கான தண்டனையோ என்று தன்னையே நொந்துகொண்டாள்.
அதேநேரம் ஜமதக்னி முனிவரும் விழித்துக் கொண்டார். தனது ஞான திருஷ்டியால் நடந்த சம்பவங்களை அறிந்தார். பத்தரைமாற்றுத் தங்கமாக, பதிவிரதையாக இருந்த தன் மனைவி, ஒரு கந்தர்வனின் அழகில் மயங்கி நிலை குலைவதா..? குமுறினார், ஜமதக்னி. தனது ஐந்து குமாரர்களையும் அழைத்து, உடனே நதிக்கரை சென்று, தாயின் தலையைத் துண்டித்து வருமாறு பணித்தார். தாயைக் கொல்வதா? இது என்ன விபரீதம்! எங்களால் முடியாது என, மூத்த குமாரர்கள் நால்வரும் மறுத்து விட்டனர். ஐந்தாவது குமாரன், தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதை உணர்ந் தவன். அவன் தான் பரசுராமன். புறப்பட்டான் கோடரியுடன்... ஆற்றின் கரையில் அழுது கொண்டிருந்த தன் அன்னையின் தலையை வெட்டிவிட்டுத் திரும்பினான்.
அவனது கீழ்படியும் செயலில் மகிழ்ந்தார் ஜமதக்னி. எதற்காக தாயையே சிரச்சேதம் செய்யச் சொல்கிறீர்கள்? என்ன குற்றம் செய்தாள் அவள்? என்று கேள்வி எதையும் எழுப்பாமல், தகப்பன் இட்ட ஆணையை உடனே நிறைவேற்றிட்ட மைந்தனின் செயலால் மகிழ்ந்த முனிவரின் சினமும் தணிந்தது. ‘‘உன் செயலால் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன் மகனே. என்ன வேண்டும் உனக்கு? தயங்காமல் கேள்’’ என்றார் ஜமதக்னி. ‘‘எனது தாயை மீண்டும் எங்களுக்கு உயிர்பித்துத் தரவேண்டும். இன்று நிகழ்ந்தவை அனைத்தும் அவளது மனதில் படியாது மறைந்திட வேண்டும்’’ என்று கோரி பரசுராமன் தந்தையாரின் பாதம் பணிந்தான். தனயனின் தாயன்பு கண்டு மெய்சிலிர்த்தார் ஜமதக்னி. ‘அப்படியே ஆகுக’ எனக்கூறி, ரேணுகாவையும் மன்னித்தருளினார்.
இப்படிப்பட்ட புத்திர ரத்தினத்தை பெற்றெடுக்க ஜமதக்னி வழிபட்ட பல திருத்தலங்களில் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள முழையூரும் ஒன்று. முனிவருக்கு பரசுராமன் என்ற அவதார புருஷனை அனுக்ரகித்த ஈஸ்வரன், இங்கே பரசுநாதராக அருட்பாலிக்கிறார். இந்த முழையூர் திருக்கோயிலில் அட்சய திருதியை அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. திருமலை ராயன் ஆற்றில், பரசுநாதர் எழுந்தருளி, தீர்த்தவாரி காண்கிறார். கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற விரும்பும் மாணவ, மாணவியர் எட்டுப்பட்டை கொண்ட கம்பீரமான சிவலிங்கத் திருமேனியையும், அறிவுக் கண் திறப்பவளான ஞானாம்பிகையையும் வணங்கி வழிபட வருகிறார்கள். அட்சய திருதியை அன்று,முதல் ஜாமத்தில் அவதரித்தார் பரசுராமர்.
அதனால் ஜெயந்தியும், அட்சய திருதியையும் சேர்ந்தே வரும். அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கும் வழக்கம் இப்போது பெருகி வருகிறது. அதைவிட அன்றைய தினம் இல்லாதவர்களுக்கு தானம் வழங்குவது மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக குடை, செருப்பு, குடிநீர், உணவு ஆகியவற்றை தானமாக வழங்குவது சிறந்த பலனைத் தரும். குன்றாத வளர்ச்சியைக் குறிக்கும் நாள் ஆனதால், அட்சய திருதியை அன்று துவங்கும் எந்தத் தொழிலும், தடையின்றி அதிவேகமாக முன்னேறிடும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை அன்று இறைவன் திருவருளோடு துவங்கும் எல்லா ஆக்கபூர்வப் பணிகளும், அள்ள அள்ளக் குறையாமல் வளர்ந்தோங்கும்.
Leave a Comment