காவிரி மகா புஷ்கரம் கோலாகலம் ....
புரட்டாசி மாத பிறப்பான இன்று காவிரி மகாபுஷ்கரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காவிரி மகா புஷ்கர விழா செப்டம்பர் 12 ஆம் தேதியிருந்து 24-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் வைணவ விழா ஆகும். இந்த விழாவின்போது பக்தர்கள் காவிரி நதியில் புனித நீராடினால் கங்கையில் குளித்த பயனை அடைவர் என்பது ஐதீகம். ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ, அந்த ஆண்டு அந்த ராசிக்கான நதியில் புஷ்கரம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு குருபகவான் நேற்று திருக்கணித பஞ்சாங்கப்படி துலா ராசியில் இடம் பெயர்ந்துள்ளார். இதனால் துலாம் ராசிக்கு உரிய காவிரியில் புனித நீராடுவது சிறப்பு. நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள காவிரி ஆறு துலா கட்டத்தில் கடந்த 4 நாள்களுக்கு முன்னர் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காவிரி தாய் சிலைக்கு அபிஷேகம் நடந்தது. மேலும் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திலும் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாத பிறப்பையொட்டி, 108 வைணவ தலங்களில் ஒன்றான ஸ்ரீரங்கம் காவிரியில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் திரண்டனர். காவிரி தாய்க்கு ஆரத்தி எடுக்கும் விதமாக வெற்றிலையில் பூஜை பொருள்களை வைத்து கற்பூரம் ஏற்றி ஆற்று நீரில் மிதக்க விட்டனர். புரட்டாசி மாத பிறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் காவிரி நீரில் நீராடினர்.
Leave a Comment