திருப்பதி மலையில் லட்டு தட்டுப்பாடு


பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில் திருப்பதி மலையில் மதியம் முதல் லட்டு பிரசாதத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் கூடுதலாக லட்டு கேட்கும் பக்தர்களுக்கு தலா 2 லட்டுகள் மட்டுமே  வழங்கப்படுகின்றன.

திருமலையில் ஏழுமலையானை வழிபடும் பக்தர்கள் அனைவருக்கும் தலா ஒரு லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன் லட்டு பிரசாதத்தின் விலையை 100 சதவீதம் அளவிற்கு உயர்த்திய தேவஸ்தான நிர்வாகம் பக்தர்கள் இனிமேல் எத்தனை லட்டு தேவை என்றாலும் கவுண்டரில் நேராக பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தது.

 அப்போது முதல் அதற்கு முன் 25 ரூபாய்க்கு விற்பனை செய்த லட்டு ஒன்று 50 ரூபாய்க்கும்,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய லட்டு ஒன்று 200 ரூபாய்க்கும், 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வடை பிரசாதம் 100 ரூபாய்க்கும் கவுண்டர்களில் பக்தர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதனால் பக்தர்கள் தங்களுக்கு தேவையான எண்ணிக்கையில் லட்டு மற்றும் வடை ஆகிய பிரசாதங்களை வாங்கி சென்றனர். இந்த நிலையில்  பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள காரணத்தால் அதற்கு ஏற்ற வகையில் லட்டு உற்பத்தி ஏழுமலையான் கோவிலில் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே இன்று மதியம் முதல் திருப்பதி மலையில் லட்டு பிரசாதத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் சாமி கும்பிட்ட பின் பக்தர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் லட்டு விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.

எனவே பக்தர்களுக்கு டிக்கெட்டுகளுக்கு உரிய ஒரு லட்டு தவிர கூடுதலாக தலா இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் லட்டு பிரசாதத்தை வாங்கி சென்று உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு பங்கிடலாம் என்று கருதி வாங்குவதற்காக கவுண்டருக்கு சென்ற பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.



Leave a Comment