திருப்பதி திருக்குடையை தரிசிக்க தயாரா?
சென்னையில் இருந்து செப்டம்பர் 21ஆம் தேதியன்று திருக்குடை ஊர்வலம் புறப்படுகிறது என்று ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின் போது தமிழகத்தில் இரண்டு மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை, கிளி, வஸ்திரம். இவற்றை சூடிக்கொண்டுதான் பக்தர்களுக்கு காட்சி தருவார் ஏழுமலையான். மற்றொன்று 150 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் இருந்து ஊர்வலமாகச் சென்று ஏழுமலையான் கருடசேவைக்காக பாரம்பரியமிக்க திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படும். இந்த ஆண்டும் திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்யப்பட உள்ளது. சென்னை பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் வருகிற 21ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்க உள்ளது. இந்த ஊர்வலம் என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது. திருக்குடை ஊர்வலமானது 26ஆம் தேதி திருமலை செல்கிறது. அங்கு மாடவீதி வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையாக சமர்ப்பணம் செய்யப்படுகிறது.
Leave a Comment