குழந்தைகளின் எதிர்காலத்தை முடிவு செய்யும் வசந்த பஞ்சமி .... 


தமிழகத்தில் சரஸ்வதி பூஜையை கொண்டாடுவது போல வட மாநிலங்களில் வசந்த பஞ்சமி நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி வழிபாடு நடைபெற்றதாக வேதங்களிலும் புராணங்களிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. உலகத்தில் உயிர்களைப் படைத்த பிரம்ம தேவன், தன் படைப்புத் தொழிலில் சோர்வு ஏற்பட, அதை நீக்கிக் கொள்ளும் வகையில் வசந்த பஞ்சமி நாளன்றுதான் சரஸ்வதிதேவியைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. சரஸ்வதி தேவியின் கையில் வீணையைக் கொடுத்து அதன்மூலம் உலக மக்களுக்குப் பேசும் சக்தியை பிரம்மா அளித்ததாகப் புராணம் கூறுகிறது.  

 வசந்த பஞ்சமி நாளில் வட மாநிலத்தவர் சரஸ்வதிதேவியை வழிபடுகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர்கூட இந்த வசந்த பஞ்சமி நாளில்தான் சாந்தீபனி குருகுலத்தில் சேர்ந்து பதினாறு கலைகளைக் கற்றதாகக் கூறப்படுகிறது. 

இந்த வசந்த பஞ்சமி நாளன்று பூஜை அறையில் சரஸ்வதி தேவியின் சிலை அல்லது படம் மஞ்சள் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது. மஞ்சள் சாமந்தி மலர்கள் வட மாநிலங்களில் பூஜைக்கும், மலர் மாலைகளுக்கும் உரிய முக்கிய மலராகத் திகழ்கிறது. சரஸ்வதிதேவி சிலைக்கும் மஞ்சள் ஆடை அணிவிக்கப்படுகிறது. வீடுகளில் மக்களும் அன்று மஞ்சள் ஆடைகள் அணிகின்றனர். 

நல்லொழுக்கம், அறிவு, ஞானம், இசை, அறிவு, வாக்கு வன்மை, கவித்திறன் போன்ற குணநலன்கள்  கிட்ட  வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. 

குறிப்பாக மேற்கு வங்கத்தில் வசந்த பஞ்சமி நாளில் கல்வியைத் துவக்கவுள்ள குழந்தைகள் முன்பாக, பென்சில், பேனா, சிறிய இசைக் கருவிகள், தொழிற் கருவிகள் போன்றவை வைக்கப்படும். குழந்தைகள் அவற்றில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்வர். 

குழந்தை எடுக்கும் பொருளின் அடிப்படையில் அதன் எதிர்காலம் அமையும் என்று நம்பிக்கை. உதாரணமாக பேனாவை எடுத்தால் பெரிய அறிவாளியாக ஆவர் என்றும், சங்கீத உபகரணங்களை எடுத்தால் சங்கீத மேதையாவான் என்றும், தொழிற் கருவியினை எடுத்தால் தொழில் முனைவராக ஆவான் என்றும் நம்பப்படுகிறது. பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் கூடி சரஸ்வதிதேவிக்குப் பூஜை செய்து வணங்குகின்றனர். 



Leave a Comment