மன அமைதி தரும் மயிலம் முருகன் கோயில்


1000 வருடங்களுக்கு முந்தைய வரலாறு உடையது மயிலம் முருகன் கோவில். எப்போதும் அமைதி நிலவும் மயிலம் முருகன் கோவிலுக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஒரு சிறிய குன்றின் மீது, நெடிய ராஜகோபுரத்துடன் விளங்குகிறது. பசுமையான மரங்கள் சூழ்ந்து இருப்பதால், தூரத்தி லிருந்து பார்க்கும்போது அந்த குன்று ஒரு மயில் தோகை விரித்திருப்பது போல் அழகாகக் காட்சியளிக்கிறது.

கோபுரமானது மயிலின் கொண்டை போல உச்சியில் இருக்கிறது. கோயிலைப் போலவே இந்த மலையையும் புனித மாகக் கருதி பக்தர்கள் வழி படுகிறார்கள்.

 முருகப் பெருமானால் போரில் சூரபத்மன் தோற் கடிக்கப்பட்டான் அவன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி... மயிலம் வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்தான். தவத்தில் மகிழ்ந்து முருகன் அவனுக்கு காட்சி தந்தார். அப்போது ‘‘என்னை தங்கள் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!’’ என முருகனிடம் சூரபத்மன் வேண்டினான்.

மேலும் ‘‘மயில் வடிவ மலையாக இருந்து நான் தவம் புரிந்த இந்த மலைக்கு ‘மயூராசலம்’ எனப் பெயர் வழங்க வேண்டும். தாங்கள் எந்த நாளும் இங்கு வீற்றிருந்து அன் பர்களுக்கு அருள் புரிய வேண்டும்!’’ என்றும் கோரிக்கை வைத்தான்.

உடனே முருகன் அவனிடம் ‘‘எதிர் காலத் தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்!’’ என்று கூறிவிட்டு மறைந்தார். சூரபத்மன், அதுவரை மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். ‘மயூரா சலம்’ என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.

பாலசித்தர் வழங்கும் வேலாயுதம் :

பொதுவாகவே சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த தலங்களில், பக்தர்களுக்கு வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எவரிடமும் சரணடையாத முருகனது வேலாயுதம், பாலசித்தரிடம் வசமானது என்பது ஐதீகம். இதிலிருந்து பாலசித்தரின் சக்தி விளங்கும். இன்றைக்கும் மயிலத்தில் நடக்கும் கந்த சஷ்டி விழாவின்போது சூர சம்ஹாரத்துக்குக் புறப்படும் முருகர், பாலசித்தரிடமிருந்தே வேலாயுதத்தைப் பெற்றுச் செல்கிறார்.

 வள்ளி- தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகனின் ஒரு கையில் வேல். இன்னொரு கையில் சேவற்கொடி. பெரும்பாலான கோயில்களிலும் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். இங்கு மட்டும் வடக்குத் திசையை நோக்கியபடி இருப்பது கோயிலின் சிறப்பு.

தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் இங்கு வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்குள்ள மயில் வாகனத்துக்கு கிடைத்திருக்கிறது.

3 உற்சவர்கள் :🙏

மயிலம் கோயிலில் முருகன் மூன்று விதமான உற்ச வராகக் காட்சியளிக்கிறார். இவர்களில் பிரதான உற்சவர் வள்ளி- தெய்வானை சமேதரான பாலசுப்பிரமணியர்.

பகலில் வெள்ளிக்காப்பு அணிந்தும், மாலை பூஜைக் குப் பிறகு தங்கக் காப்பு அணிந்தும் அருள் பாலிக்கும் இவர் மாதாந்திர கார்த்திகைகளிலும், பங்குனி உத்தரப் பெருவிழாவிலும் வீதியுலா வருகிறார். மலையைச் சுற்றி இருக்கும் மூன்றாம் பிராகாரத்தில் வீதியுலா நடக்கிறது.

பங்குனி உத்திரம் இங்கு பன்னிரண்டு நாட்கள் பிரம்மோற்சவமாக விமரிசையாக நடக்கிறது. முருகனுக்கு மயில் மட்டுமின்றி, பல்வேறு விதமான வாகனங்கள் இருப்பதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இதை நினைவுறுத்தும் விதமாக பங்குனி உத்தரப் பெருவிழாவில் திருமணக் கோலத்தில் தினம் ஒரு வாகனத்தில் முருகன் வீதியுலா வருகிறார். மயில், யானை, ஆட்டுக் கிடா, நாகம், பூதம் என விதம் விதமான வாகனங்களில் வலம் வருவார் இந்த மூலவர்.

இரண்டாவது மூலவர் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி. பரணி நட்சத்திரத்தின்போது வீதியுலா வரும் இவர், தினசரி சுற்றுப் பிராகாரத்தில் இருந்தபடி அருள் பாலிக்கிறார். மாசிமக தீர்த்தவாரியின்போது இந்த உற்சவரை புதுவை கடற்கரைக்குத் தோளில் சுமந்து செல்கிறார்கள். 5 நாட்கள் அங்கிருந்தவாறே அருள் வழங்கும் இவர் 6&வது நாளன்று திரும்பி வருவார்.

மூன்றாவது உற்சவர் ஆறுமுகங்கள் கொண்ட சண்முகப் பெருமான். கந்த சஷ்டி உற்சவத்தின்போது ஆறு நாட்கள் வீதியுலா வருவது இவர்தான்.
இவை தவிர சித்திரையில் வசந்த உற்சவம், ஆனியில் ஏழு நாட்கள் லட்சார்ச்சனை என இங்கு பெரும்பாலும் திருவிழா மயம்தான்!

முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள்.

மூலவர் வீற்றிருக்கும் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன. மயிலம் கோயிலில் செவ்வாய்க் கிழமை தோறும் காலசந்தி பூஜையின் போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இப்படி அர்ச்சனை செய்யும் பக்தர்களுக்குக் கடன் தொல்லையுடன் பணப் பிரச்சினைகள் அகலும் என்பது நம்பிக்கை.

இதேபோல உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.

எப்போதும் அமைதி நிலவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும். 



Leave a Comment