வாக்கு வெற்றி, ஆத்மபூஜை தரும் வாராஹி மந்திரம்


வாக்கு வெற்றி (சத்ரு மாரணம்)

பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னை யேபுகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்ட தோ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே.

தேவி வருகை (பூதபந்தனம்)

எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே.

 ஆத்மபூஜை (மஹாமாரி பஜனம்)

சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே

 தேவிதாபனம் (பில்லி மாரணம்)

நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.

மந்திரபூஜை (முனிமாரணம்)

மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள்என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹிஎன் மெய்த் தெய்வமே.

வாராஹி அமர்தல் (மூர்த்தி தியானம்)

ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண்எதிரே
வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே
 



Leave a Comment