ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தச சஹஸ்ர ராஜமாதங்கி மூலமந்தர ஜப ஹோமம்.... 


தச சஹஸ்ர (10,000) ராஜமாதங்கி மூலமந்தர ஜப ஹோமத்துடன், ராஜயோகம் தரும் அஷ்ட புஜ மரகத ஸ்ரீ ராஜ மாதங்கி தேவி ஞான ஆலய பூமி பூஜை, 27.3.2022 - 28.3.2022 ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ளது.

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நிகழும் பிலவ வருடம் பங்குனி மாதம் 14ம் தேதி 28.3.2022 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் 9.50 மணிக்கு கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் அருள்மிகு அஷ்டபுஜ மரகத ஸ்ரீ ராஜமாதங்கி தேவி ஞான ஆலய பூமி பூஜை நடைபெற உள்ளது. 

இதனை முன்னிட்டு 27.3.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் கோ பூஜை, வேத பிரார்த்தனை, குரு வந்தனம், ஸ்ரீ மகா கணபதி பூஜை, விஷேச மஹா சங்கல்பம், கலச ஸ்தாபனம், ஸ்ரீ ராஜ மாதங்கி தியானம், ஆவஹந்தி, சோடஷ உபச்சார பூஜா சகித ஆவரண அர்ச்சனை, தீபாராதனை ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஆவஹந்தி ஹோமம், ஸ்ரீ ராஜமாதங்கி தச சஹஸ்ர மூலமந்திர ஹோமம், மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை. மாலை 4.00 மணிக்கு ஸ்ரீ ராஜமாதங்கி தச சஹஸ்ர மூலமந்திர ஹோமம் தொடர்ச்சி மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெறும்.

மேலும் 28.3.2022, திங்கட்கிழமை காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை ஸ்ரீ ராஜமாதங்கி தச சஹஸ்ர மூலமந்திர ஹோமம் பூர்த்தி, விஷேச மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்று 9.00 மணி முதல் 9.50 மணிக்குள் அருள்மிகு அஷ்டபுஜ மரகத ஸ்ரீ ராஜமாதங்கி தேவி ஞான ஆலய பூஜை ஸ்தாபகர் யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் நடைபெறுகிறது இதில் பக்தர்கள், பொதுமக்கள், ஆன்மிக அருளாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். 

சியாமளா தேவி எனும் ராஜமாதாங்கி

‘சியாமளா தேவி’ என்றும், ‘ஸ்ரீ ராஜ சியாமளா’ என்றும், ‘ஸ்ரீமாதங்கி என்றும், ராஜமாதங்கி என்றும் ‘மஹாமந்திரிணீ’ என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் தேவியானவள், மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள்.

தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள். 

வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால்’மந்திரிணீ’என்றும் போற்றபடுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள். இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே ‘சியாமளா நவராத்திரி’ யைக் கொண்டாடி வழிபடுகிறோம்.

ஸ்ரீ ராஜ மாதங்கி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள். அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள். அம்பிகையின் முத்ரேஸ்வரியாக,(முத்திரை மோதிரம் தாங்கியவளாக) இருப்பவள். இதை ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், மந்த்ரிணீ ந்யஸ்த ராஜ்யதுரே நம: என்று போற்றுகிறது.

மேலும் ‘கதம்பவனவாஸினீ’ என்றும் இந்த அம்பிகை துதிக்கப்படுகிறாள். ஸ்ரீ லலிதா தேவியின் வாசஸ்தலமான ஸ்ரீ நகரத்தில் ,சுற்றிலும் கதம்பவனம் நிறைந்த பகுதியில் வாசம் செய்வதாலேயே சியாமளா தேவிக்கு இந்த திருநாமம் ஆகும்.

மதுரை மீனாட்சி அம்மன் இந்த அம்பிகையின் அம்சமாகவே போற்றப்படுகிறாள். மதுரைக்கு ‘கடம்பவனம்’ என்ற ஒரு பெயரும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பண்டாசுர வதத்தின் போது, கேயசக்ர ரதத்தில் (ஏழு தட்டுக்கள் உள்ள ரதம்) இருந்து அம்பிகைக்கு உதவியாக சியாமளா தேவி போர் புரிந்து, பண்டாசுரனின் தம்பியான விஷங்கனை வதம் செய்தாள்.

‘கேயசக்ர-ரதாரூட-மந்த்ரிணீ-பரிசேவிதா'(ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்) சூக்ஷ்ம அர்த்தங்களின்படி பார்த்தால், அகங்காரம் மிகுந்த ஜீவனே ‘பண்டாசுரன்’ (உலகாயத) விஷயங்களில் ஜீவனுக்கிருக்கும் ஆசையே விஷங்கன். மேலும், குறுக்கு வழியில் செல்லும் புத்தியையும் விஷங்கன் குறிக்கிறான். சியாமளா தேவி, நேர்வழியில் செல்லும் மனதிற்கும் புத்திக்கும் ஆத்மஞானம் அறியும் மனநிலைக்கும் அதிபதி. ஆகவே, சியாமளா தேவியே ‘விஷங்க வதம்’ செய்கிறாள்.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ராஜமாதங்கி:

மேற்கண்ட சிறப்புகள் வாய்ந்த அம்பிகைக்கு தன்வந்திரி பீடத்தில் மாபெரும் ஆலயம் அமைய உள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்ககுடியதாகும் 5.6 அடி உயரத்தில் மாணிக்கக் கற்கள் பதித்த வீணை, எட்டுத் திருக்கரங்கள், வெளிர் மரகதப் பச்சை வண்ணம், திருமார்பில் குங்குமச்சாந்து தரித்த வண்ணம், திருநெற்றியில், சந்திரகலையுடன், கரங்களில், கரும்பு வில், மலரம்பு, பாச அங்குசம், தாமரை பூவுடன், பச்சைக்கிளி சிரித்த முகத்துடன் காட்சிதரும் வண்ணம் அமைய உள்ளார். 

இதில் அம்பிகையின் மரகதப் பச்சை வண்ணம், ஞானத்தைக் குறிக்கிறது. வித்யாகாரகனான புத பகவானுக்கு உரிய நிறமும் பச்சையே. வீணை, சங்கீத மேதா விலாசத்தையும், கிளி, பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும் ஆத்ம ஞானத்தையும் குறிக்கிறது. மலரம்பு கலைகளில் தேர்ச்சியையும், பாசம் ஈர்க்கும் திறனையும், அங்குசம் அடக்கியாளும் திறனையும், கரும்பு உலகியல் ஞானத்தையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

மேலும் ஸ்ரீ சியாமளா, பச்சை வண்ணம் உடையவளாக, சிரசில் சந்திரகலையை அணிந்தவளாக, நீண்ட கேசமும் புன்முறுவல் பூத்த அழகுத் திருமுகமும் உடையவளாக, இனிமையான வாக்விலாசம் உடையவளாக, ஆகர்ஷணம் பொருந்திய திருவிழிகள் உடையவளாக, கடம்ப மாலையும், பனை ஓலையினாலான காதணி மற்றும் பல்வேறு ஆபரணங்கள் தரித்து தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாகவும் சித்தரிக்கப்பட உள்ளார்.

சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜ சியாமளா தேவி. தாந்த்ரீக முறையில் வழிபடப்படும், தச மஹா வித்யைகளுள் மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யாரூபமாகப் போற்றப்படுகிறாள்.

சரஸ்வதி தேவியை மொழி, கலைகள், கற்கும் திறன் இவற்றின் அதிதேவதையாகக் கொண்டால், மாதங்கி தேவியை மனதை உள்முகமாக திருப்பி, தான் யார் என்பதை அறியும் ஆற்றலுக்கும், ஆத்மவித்தைக்கும் அதிதேவதையாகக் கொள்ளலாம்.

தசமஹா வித்யைகளுள் ஒருவராகக் கருதப்பட்டாலும், இந்த தேவி, ஆற்றல் நிறைந்த மிகப் புனிதமான திருவுருவாகவே போற்றித் துதிக்கப்படுகிறாள். அனைத்து கேடுகளையும் தான் ஸ்வீகரித்துக் கொண்டு நன்மையை பிறருக்கு அருள்பவளே ஸ்ரீ மாதங்கி. இந்த தகவலை தன்வந்த்ரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



Leave a Comment