திருப்பதியில் மார்ச் 29 ஆம் தேதி 6 மணிநேரம் தரிசனம் நிறுத்தம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 29ம்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனையொட்டி 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்கிழமையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். அதன்படி வரும் ஏப்ரல் 2ம்தேதி யுகாதி பண்டிகையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. 29ம்தேதி காலை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை சேவை நடக்கும். பிறகு காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். இதில் அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தப்படும்.
பின்னர் பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிகட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்களால் தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்படும். மூலவர் மீது செலுத்தப்பட்ட பட்டுத்துணி அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படும். 12 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால், சுமார் 6 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.4.28 கோடி காணிக்கை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று காலை முதல் இரவு வரை மொத்தம் 64 ஆயிரத்து 986 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 33 ஆயிரத்து 200 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ.4.28 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
Leave a Comment