அழகன் முருகனுக்கு உகந்த பங்குனி உத்திர திருநாள் முக்கிய தகவல்கள்.... 


பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத்திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. 

பங்குனி உத்திர விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். 

சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் பங்குனி உத்திர திருநாள். 

அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் பங்குனி உத்திர நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர்.

முருக பெருமான் தெய்வானையை பங்குனி உத்திர நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான். 

ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான். 

மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள். 

பங்குனி உத்திர நாள் அன்று காஞ்சியில் காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள். 

அழகுமிகு 27 கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் பங்குனி உத்திர நாள் தான். 

பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் தான். 

பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம். 

திருமணஞ்சேரி, ஆலங்குடி, ஸ்ரீவாஞ்சியம், திருமகல், திருவிடந்தை, திருவேதிக்குடி, பிள்ளயார்பட்டி, திருவீழிமிழலை, திருப்பரங்குன்றம், கன்னியாகுமரி, காஞ்சி, மாங்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர், திருசத்தி முற்றம், கேரளத்தின் திருமணஞ்சேரி, ஆரியங்காவு மற்றும் மண முடிச்சநல்லூர், திருப்பாச்சேத்தி, திருவெணங்காடு, திருவேள்விக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், வேதாரண்யம், திருவிடை மருதூர், கும்பகோணம், திருநல்லூர், திருமழப்பாடி, திருப்பாலைத் துறை, பந்த நல்லூர், மதுரை, திருக்குற்றாலம், திருவேற்காடு, திருச்சோற்றுத்துறை, வைத்தீஸ்வரன் கோவில், திருநாகேஸ்வரம், பூவாளூர், சக்தி கோவில் திருமணமங்கலம், விசாலேஸ்வரன் கோவில் தாடிக்கொம்பு, திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று திருமணம் விரைவில் முடிய வேண்டும் என வேண்டி கொண்டு வரலாம். வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்.

பங்குனி உத்திரம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ந்தேதி வருகிறது. இந்த நன்னாளில் எல்லா முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம், மதுரை, கள்ளழகர் திருக்கல்யாணம், திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி, ஸ்ரீ வில்லிபுத்தூர், மோகூர், எம்பெருமான் திருக்கல்யாணம் நடக்க உள்ளன.

அழகன் முருகனுக்கு உகந்த நாள். அவர்தம் பக்தர்கள் காவடி எடுப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் உகந்த நாள். செல்வம் படைத்த ஆன்மீக மெய்யன்பர்கள் இந்நாளில் முருகப் பெருமானுக்கு திருமணம் செய்விக்கலாம்.

திருவையாறு அருகிலுள்ள திங்களூர் சிவாலயத்தில், பங்குனி உத்திரத் திருநாளில் மட்டும், லிங்கத் திருமேனியை சந்திரன் தனது கிரணங்களால் தழுவி வழிபடுவதைக் காணலாம்.



Leave a Comment