மாங்கல்ய பலம் தரும் காரடையான் நோன்பு பிறந்த கதை
இல்லறம் நல்லறமாக அமைய , கணவனும் மனைவியும் மனமொத்த தம்பதியராக வாழ்வது அவசியம். குடும்பத்திற்கு ஆணிவேரான கணவன் நீண்ட ஆயுளுடனும் ,தேக ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டியும் , தான் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டும் சுமங்கலிப் பெண்கள் இருக்கும் விரதமே காரடையான் நோன்பு.
மாசியும், பங்குனியும் சேரும் சுப வேளையில் ‘காரடையான் நோன்பு’கடைபிடிக்கப்படுகிறது. இது கவுரி விரதம், காமாட்சி விரதம், சாவித்ரி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. பெண்கள் தங்கள் மாங்கல்ய பலம் கூடுவதற்காக மேற்கொள்ளும் நோன்பு இது .
நோன்பு பிறந்த கதை
அஷ்வபதி மன்னனின் மகள் சாவித்ரி, விதிவசத்தால் தனது நாட்டை எதிரிகளிடம் பறிகொடுத்த சால்வ நாட்டு மன்னனின் மகன் சத்யவானை ,விரும்பி திருமணம் செய்து கொள்கிறாள் . காட்டையே தங்களது வசந்த மாளிகையாக மாற்றி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர் . ஒரு நாள் ஞாலத்தை சுற்றி வரும் திரிகால ஞானியான நாரதர் மூலம் சத்யவானுக்கு ஆயுள் குறைவு என்று அறிந்து அதிர்ச்சி அடைகிறாள் சாவித்ரி .
கணவனின் நீண்ட ஆயுளுக்காக தான் வசிக்கும் காட்டையே கோவிலாக்கி விரதம் இருக்க ஆரம்பித்தாள். தனது கணவன் சத்யவானின் நீண்ட ஆயுளுக்காக சாவித்திரி நோன்பிருந்தது பங்குனி மாதம் பிறக்கிற நேரம். ஆனால் சோதனையாக அன்று மாலையே சத்தியவானுக்கு கடும் தலைவலி ஏற்பட்டு மனைவியின் மடியில் சாய்ந்தான். அதே நேரத்தில், பதிவிரதையான சாவித்ரியின் கண்களுக்கு எருமை வாகனத்தில் கையில் பாசக்கயிற்றுடன் ஒரு உருவம் தென்பட்டது. சற்றும் மனம் பதறாத சாவித்திரி நீங்கள் யார்? என்றாள் .
சாவித்ரியின் கண்களுக்கு தனது உருவம் தென்பட்டது குறித்து சற்று அதிர்ந்த எமதர்மராஜன் , நீ பதிவிரதை என்பதால் உன் கண்ணுக்குத் தெரிந்தேன். நான் தான் எமதர்மராஜா. உன் கணவனின் ஆயுளைப் பறிக்க வந்தேன்,என்றார் . மேலும் தான் வந்த வேலையை முடித்துக் கொண்டு சத்யவானின் உயிருடன் கிளம்பினார். தன்னை பின் தொடர்ந்த சாவித்திரியிடம் உனக்கு வேண்டும் வரங்களைத் தருகிறேன் கேள். ஆனால் எடுத்த உயிரை கொடுக்க வாய்ப்பில்லை என்றார் .
குலம் தழைக்க வரம் வேண்டும்
சாவித்ரியும் விடாப்பிடியாக என் குல வம்சம் தழைக்க வேண்டும் என்ற வரம் கேட்டாள் . தன் கடமையை நிறைவேற்றும் அவசரத்தில் இருந்த எமன் அப்படியே ஆகட்டும் உன் வம்சம் வாழையடி வாழையாக தழைக்கும்’ என்று வரம் தந்தார் . ‘‘தர்மராஜனாகிய உங்கள் வாக்கு பலிக்க வேண்டும் என்றால் , என் கணவனை உயிருடன் என்னுடன் அனுப்ப வேண்டும்’’ என்றாள் சாவித்ரி. அவளது புத்தி சாதுர்யத்தால் கவரப்பட்ட எமதர்மன் , சத்யவானுக்கு மீண்டும் உயிர் தந்தார் . நீண்ட ஆயுளுடன் வாழுமாறு அவர்களை வாழ்த்தினார். காட்டில் கிடைத்த மண்ணை பிசைந்து , தனது பதிவிரதா தன்மையினால் , சாவித்ரி அடைகளாக தட்டி , காமாட்சி அம்மனை நினைத்து படைத்து தனது விரதத்தை முடித்தாள்.
‘உருகாத வெண்ணையும், ஓரடையும் நூற்றேன்.
மறுக்காமல் எனக்கு மாங்கல்யம் தா’
என்று பிரார்த்தித்து கணவர் மற்றும் பெரியோர்களிடம் ஆசி பெற்று நோன்பை முடிக்க வேண்டும்.
Leave a Comment