திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கட்டண தரிசனம் ரத்து.... 


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூபாய்.250, ரூபாய்.20 கட்டண தரிசனம் இன்று முதல் ரத்து செய்யப்பட்டது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆவனித்திருவிழா, மாசிச்திருவிழா,கந்த ஷ்ஷ்டி, தைப்பூசம் உள்ளிட்ட  பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.  இந்த திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள்  வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். 

திருவிழா காலங்கள் தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவிலில் ரூ.250.ரூ.100 ரூ.20 மற்றும் பொது தரிசனங்களில் பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வதால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். 

மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதில் கோவில் நிர்வாகத்தினர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதால், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி அறநிலையத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று முதல் 250 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனம், மற்றும்  20 ரூபாய் கட்டண தரிசனம் இன்று முதல் ரத்து செய்யப்பட்டது.

100 ரூபாய் கட்டண தரிசனம், மற்றும்  பொது தரிசனங்களில் மட்டுமே  பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் இரண்டு தரிசன வரிசையில் செல்லும் பக்தர்கள் மகா மண்டபத்தில் ஒரே வரிசையில் சென்று  தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவிலில் கைங்கரியம் செய்யும் திரிசுதந்திரர்களை கட்டுப்படுத்தும் விதமாக அர்ச்சகர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனம் முறையை  ஒழுங்குபடுத்த இன்று முதல் 100 ஆயுதப்படை காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



Leave a Comment