நீங்காத செல்வத்தையும், மன நிம்மதியையும் தரவல்ல விஷ்ணு ஸஹஸ்ரநாமம்


நல்ல ஆரோக்கியத்தையும், நீங்காத செல்வத்தையும், மன நிம்மதியையும் தரவல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம். உடலுக்கு ஏற்பட்ட நோய்கள் மட்டுமின்றி ஆத்மாவைப் பீடித்துப் படுத்தும் நோயாகிய பிறவிப் பிணியையும் போக்க வல்ல மருந்து விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.

ௐ லோஹிதாக்ஷாய நமஹ 
லோஹிதாக்ஷாய நமஹ   

ஆழ்வாரால் பாடப்பட்ட நாயன்மாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், கோச்செங்கட்சோழ நாயனார் பற்றித் திருமங்கையாழ்வார்  பெரிய திருமொழியில் 
“அம்பரமும் பெருநிலனும் திசைகள் எட்டும்….
செம்பியன் கோச் செங்கண்ணான் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே” எனத் தொடங்கிப் பத்துப் 
பாசுரங்கள் பாடியுள்ளார்.

யார் இந்த நாயன்மார்? கைலாயத்தில் மால்யவான், புஷ்பதந்தன் என்ற இரு சிவகணங்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு இருவரும் சிவபெருமானுக்கு எதிரிலேயே சண்டையிட்டுக் கொண்டனர். அதைக் கண்டு கோபம் கொண்ட சிவன், மால்யவானைச் சிலந்தியாகவும், புஷ்பதந்தனை யானையாகவும் பிறக்கும்படிச் சபித்தார்.

அவ்வாறே இருவரும் காவிரிக்கரையில் உள்ள திருவானைக்கா என்னும் தலத்தில் பிறந்தார்கள். திருவானைக்காவில் வெண்ணாவல் மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தைப் பார்த்த சிலந்தி, தன் எச்சிலால் வலை பின்னி லிங்கத்தின் மேல் வெயில் படாமல் காத்தது. 

யானை அதே சிவலிங்கத்தைப் பூஜிப்பதற்காகத் தன் துதிக்கையால் காவிரி நீரை எடுத்து வந்தது. சிலந்தி வலையைக்  கண்டதும், “இப்படி எச்சிலால் இறைவனை அசுத்தம் செய்திருக்கிறார்களே!” என்று வருந்தி அந்த வலையைக் களைந்துவிட்டு லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து மலரிட்டு வழிபட்டது.

அடுத்தநாள் மீண்டும் சிலந்தி லிங்கத்தின் மேல் வலையைப் பின்னியது. அதைக் கண்ட யானை மீண்டும் அதை அகற்றியது.கோபமுற்ற சிலந்தி துதிக்கையினுள் நுழைந்து யானையக் கடிக்கவே வலி தாங்காத யானை துதிக்கையைத் தரையில் அறைந்து சிலந்தியைக் கொன்றதோடு தானும் இறந்தது. இருவரும் கைலாயத்தை அடைந்தார்கள்.

சிலந்தியாய் இருந்த மால்யவான் பார்வதி தேவியிடம் தான் முக்தியடைய விரும்புவதாகத் தெரிவித்தான். திருமாலே முக்தியளிக்க வல்லவர் என்பதால் பார்வதிதேவி, கும்பகோணத்துக்கு அருகே நாச்சியார்கோவிலில் கோயில் கொண்டுள்ள வஞ்சுளவல்லித் தாயாரிடம், மால்யவானுக்கு முக்தியளிக்கத் திருமாலிடம் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டாள்.

வஞ்சுளவல்லியும் அதை ஏற்றாள். மால்யவான் தனது அடுத்த பிறவியில் சுபதேவன் என்ற சோழ மன்னனின் மனைவி கமலாதேவியின் கர்ப்பத்தை அடைந்தான். 

அவளுக்குப் பிரசவ வலி ஏற்பட்ட போது, நீலகண்ட ரிக்வேதி என்ற பண்டிதர் அரண்மனைக்கு வந்து, “சரியாக இருபத்து நான்கு நிமிடங்கள் கழித்துக் குழந்தை பிறந்தால் அவன் திருமாலின் சிவந்த திருக்கண்களின் திருவருளுக்கு இலக்காவான்!” என்று கூறினார்.

பார்வதியே வந்து இவ்வாறு சொல்வது போலக் கமலாதேவிக்குத் தோன்றியது. தனக்குப் பிறக்கும் குழந்தைக்குத் திருமாலின் அருள் கிட்டவேண்டும் என்று எண்ணிய அந்தத் தியாகத் தாய், குழந்தை பிறப்பதை இருபத்து நான்கு நிமிடங்கள் தாமதப்படுத்துவதற்காகத் தன்னைத் தலைகீழாகக் கட்டித் தொங்க விடச் சொன்னாள்.

இருபத்து நான்கு நிமிடங்கள் கழித்துக் குழந்தை பிறந்தது. எம்பெருமான் தன் செந்தாமரைக் கண்களால் குழந்தையை நன்கு கடாட்சித்தபடியால், குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. 

“செங்கண்ணா!” என்று அவனை அழைத்துவிட்டுக் கமலாதேவி உயிர்நீத்தாள்.  ‘செங்கண்ணான்’ என்றே அவனுக்குப் பெயர் சூட்டினார்கள். அவன் தகுந்த வயதில் முடிசூடிக் கொண்டு நல்லாட்சி புரிந்துவந்தான். எழுபது சிவன் கோயில்களைக் கட்டினான்.

முன் பிறவியில் தான் கட்டிய வலையை யானை களைந்தபடியால், அத்தனைக் கோயில்களையும் யானை உள்ளே நுழைய முடியாதபடி மாடக் கோவில்களாகக் கட்டினான்.

இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோள் ஈசர்க்கு எழில்மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட திருக்குலத்து வலச்சோழன்” – என்று இவ்வரலாற்றைத் திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். கோச்செங்கட் சோழ நாயனார் என அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவனாக அந்த மன்னன் கொண்டாடப் பட்டான்.
 



Leave a Comment