திருப்பதி ஏழுமலையான் சேவை கட்டணங்கள் உயர்த்த முடிவு.....
திருமலையில் மலையப்பசுவாமி கல்யாண உற்சவ சேவைக்கான கட்டணம் ஆயிரத்தில் இருந்து 2,500 ஆகவும், சுப்ரபாத தரிசன கட்டணம் ரூபாய் 240 இலிருந்து 2000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் கலக்கமடைந்துள்ளனர். வஸ்திர அலங்கார சேவைக்கட்டணமும் ரூ. 1 லட்சமாக உயர்ந்துள்ளது.
வஸ்த்ர அலங்கார சேவைக்கான கட்டணம் ரூ. 50,000 -இல் இருந்து ரூ. 1 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. கல்யாண உற்சவ சேவைக்கான கட்டணம் ரூ.1000-இல் இருந்து ரூ.2,500-ஆகவும், சுப்ரபாதம் தரிசன கட்டணம் ரூ.240-இல் இருந்து ரூ. 2ஆயிரமாகவும் அதிகரிக்கப்படுகிறது. தோமாலா சேவை மற்றும் அர்ச்சனைக் கட்டணத்தை ரூ.440 -இல் இருந்து ரூ. 5 ஆயிரமாக அதிகரிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் அடுத்த ஓரிரு நாள்களில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிப்ரவரி 15 - ம் தேதி முதல் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்களை வழங்குவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. இதையடுத்து பக்தர்கள் திருப்பதிக்கு தரிசனம் செய்யக் குவிந்து வருகிறார்கள். ஒருநாளைக்கு 15 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி என்பதால் அடுத்தடுத்த நாள்களுக்கான டிக்கெட்கள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக நேற்று இலவச டிக்கெட் வாங்கச் சென்றவர்களுக்கு 24 ம் தேதி தேதியிட்ட தரிசன டிக்கெட்களே வழங்கப்பட்டன. இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் மூன்று முதல் நான்கு நாள்கள் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகிறது. எனவே திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. அதன்படி திருமலைக்கு வரும் பக்தர்கள் மூன்று முதல் நான்கு நாள்களுக்குத் தங்கியிருக்கும் ஏற்பாடுகளோடு வருமாறு வேண்டிக்கொண்டுள்ளனர்.
Leave a Comment