ஏன் இப்படி இருக்கிறார் சிவ பெருமான் ?


 

மற்ற எல்லா தெய்வங்களை விடவும்,சிவபெருமான் தோற்றத்தில் ரொம்பவே வேறுபாடு உடையவர். மற்ற தெய்வங்கள் அலங்கார ஜோடனையாக காட்சி தரும் போது,ஈசன் மட்டும் மரவுரியும்,ஜடாமுடியும், பாம்பு அணிகலனும்,உடல் முழுக்க சம்பலுமாக காட்சித் தருகிறார்.இதற்கு பின் உள்ள தாத்பரியங்களை பார்ப்போம்.

சிவ பெருமான் சந்திரனைச் சடைமுடியில்  தரித்துக் கொண்டிருப்பது ஏன் ?

தக்கன் தன்னுடைய இருபத்தேழு பெண்களையும் சந்திரனுக்கு விவாகஞ்செய்து கொடுத்தபோது இவர்கள் அனைவரிடத்திலும், ஒரே மாதிரியான அன்பை தர வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார். ஆனால் சந்திரனோ அவர்களில் மிகுந்த அழகுள்ள கார்த்திகை ,மற்றும் ரோகிணியிடம் மட்டும் மிகுந்த காதலுடன் இருந்தான். அவர்கள் அனைவரும் மனம் வருந்தித் தக்கனிடத்தில் சொல்லிக் கவலைப் பட்டுக் கொண்டார்கள். அவன் கோபங்கொண்டு சந்திரனுடைய சோடசகலைகள் அத்தனையும் அழிந்து போகும்படி சபித்தான்.

அந்த சாபத்தின்படி தினம் ஒவ்வொரு கலையாகப் பதினைந்து கலை குறையக் கண்ட சந்திரன் மிகுந்த  துயரங்கொண்டு தேவேந்திரனிடத்தில் சொல்ல, இந்தச் சாபத்தை என்னால்  நீக்க முடியாது, பிரமதேவனிடத்தில் போய்ச் கேள் என சொல்ல,சந்திரனும் பிரம்மனிடத்தில் முறையிட்டார். “நான் சொன்னாலும் தக்கன் இந்த சாபத்தை நிவர்த்தி செய்யமாட்டான். நீ வைகுந்தத்துக்குப் போய் விஷ்ணுவிடத்தில் ஆலோசனைக் கேள் என சொல்ல,சந்திரன் அப்படியே செய்யதான். விஷ்ணுவும்  தன்னால் முடியாது, நீ ஸ்ரீ கைலாசகிரிக்குப் போய்ப் பரமசிவனிடத்தில் சரணடை என்று சொன்னார். இதைக் கேட்ட சந்திரன் ஸ்ரீகைலாயகிரிக்குப்போய், பரமசிவனைப் பணிந்து தொழுதான். பரமசிவனும் அவன் மேல் கருணை காட்டி, சந்திரனிடத்தில் இருந்த ஒரு  கலையினையும் தமது முடியில் தரித்துக் கொண்டு இது உன்னிடத்திலிருந்தால் தக்கன் சாபம் இதனை அழிக்க முடியும். இனி என்னுடைய திருமுடியிலிருக்கிற கலையைத் தொடராது. இந்தக் கலையழியாமல் இருப்பதனால் உனக்கு முன்னிருந்ததுபோலநாளுக்கு நாள் ஒவ்வொரு கலையாக வளர்ந்து சோடசகலைகளும் நிறைவுபடும். அப்படி நிறைந்தாலும் வளர்ந்தது போல மறுபடி குறைவுபடுகிறதும் வளருவதுமாக இருக்கும் என வரம் அருளினார்.

பரமசிவன் தன்னுடைய ஒரு திருக்கரத்தில் மானை  தரித்துக் கொண்டிருப்பது ஏன்?

பிட்சாடன மூர்த்தியாக தாருகாவனத்தில் எழுந்தருளின  ஈசனைப் பார்த்து  மோகித்த ரிஷி பத்தினிகள் தங்கள் கற்பு நிலை தவறினார்கள்.இதனால்  தாருகாவனத்து ரிஷிகள் கோபமுடைந்து ,ஒருவேள்விசெய்து அதிலிருந்து வெளிவந்த  புலியை சிவனைக் கொல்வதற்காக ஏவினர். ஈசனோ அதனைக் கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்து கொண்டார். வேள்வியில் இருந்து பின் வந்த மானை இடக்கையில் வைத்துக் கொண்டருளினார்.பின்பு வந்த மழுவை ஆயுதமாக வைத்துக் கொண்டார். தொடர்ந்து வந்த சர்ப்பங்களை ஆபரணமாகத் தரித்துக்கொண்டார். இவை தவிர முயலகன் என்ற அசுரன் வர அவனைக் கீழேதள்ளி முதுகிலேறி நின்றார் . ரிஷிகள் தொடர்ந்து மந்திரங்களை ஏவ,அவகைளை  டமருக ரூபங்கொண்டு அவர் திருக்கரத்தில் தாங்கிக்கொண்டார்.

சிவன் ஏன் கபாலத்தை ஏந்திக்கொண்டு இருக்கிறார் ?

பிரம்மாவின்  அகந்தையை அழிக்கும் பொருட்டு, அவருக்கிருந்த ஐந்து தலையில் நடுத்தலையைக் கிள்ளிக் கையிற் கபாலமாக வைத்தருளினார். அது முதல்பிரமனுக்குச் சதுர்முகனென்று பெயராகியது. பரமசிவன் கபாலம் தரித்துக் கொண்டிருப்பதனால் கபாலியென்றும் பெயருண்டானது.

பரமசிவன் கண்டத்தில் விஷம் பொருந்தியிருப்பது  ஏன்?

தேவர்கள் அமிர்தம் எடுக்க  பாற்கடலைக்  கடைந்தபோது ஆலகால விஷமுண்டானது.  அதைக் கண்டு பயந்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட அவர்களை காக்கும்  பொருட்டு விஷத்தைக் கண்டத்தில் வைத்தருளினார். இதனால் நீலகண்டன் எனப் பெயர் பெற்றார்.

பரமசிவனுக்கு ரிஷபவாகனம்  ஏன்?

தருமதேவதையானது என்றும் நித்தியமாயிருக்கவேண்டும்மென்ற எண்ணங்கொண்டு ரிஷபரூபமாகிப் பரமசிவனிடத்தில்  பணிந்து “இறைவனே !நான் இறவாமலிக்கும் படி அடியேனை வாகனமாகக் கொண்டருள வேண்டும்"  என வேண்டிக்கொண்டது. இறைவனும் மனமிரங்கி,அதனைத் தமக்கு வாகனமாகக் கொண்டருளினார்.



Leave a Comment