சுக்கிரனின் அதிகார தலம் திருக்கஞ்சனூர் 


திருக்கஞ்சனூர் சுக்கிரனின் அதிகார தலமாகும். கஞ்சனூர் சென்று நீல ஆடை அணிந்து வெண்தாமரை மலர்களால் சுக்கிர பகவானையும் பிரார்த்திக்க வேண்டும். இதனால் தொல்லைகள் நீங்கி நலன்கள் கிட்டும். சுக்கிர தோசம் நீங்க அனைவரும் வழிபட வேண்டிய தலம்.

இறைவர் திருப்பெயர் : அக்னீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : கற்பகாம்பிகை
தல மரம் : பலாச மரம் (புரசு)
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம், பராசர தீர்த்தம்.
வழிபட்டோர் : பராசர முனிவர், பிரம்மா, அக்கினி, கம்சன், சந்திரன், விருத்தகாளகண்டன், சித்திரசேனன், மார்க்கண்டேயர், சுரைக்கா முனிவர் முதலியோர்.தேவாரப் பாடல்கள் : அப்பர் - மூவிலைவேற் சூலம்

தல வரலாறு கம்சன் வழிபட்டதால் இத்தலம் மருவி கஞ்சனூர் என்றாயிற்று. 

முன்பொரு காலத்தில் கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு சுதர்சனர் என்ற குழந்தை பிறந்தது. வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. 

திருநீறு, உருத்திராக்கதாரியாகத் திகழ்ந்த அக்குழந்தை, தந்தை எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலிமீதமர்ந்து "சிவமே பரம்பொருள்" என்று அக்குழந்தை மும்முறை கூறியதைக் கண்டவர்கள் வியந்தனர். (இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர் பெருமாள் கோயிலிலும், அக்னீஸ்வரர் கோயில் நடராசர் சந்நிதியிலும் உள்ளது.) 

இறைவன் தட்சிணாமூர்த்தியாக வந்து சுதர்சனரை ஆட்கொண்டு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தார். மேலும், இங்கு ஒரு செல்வந்தர் தினந்தோறும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்து வந்தார். அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி தான் அவ்வுணவை உண்ணும் காட்சியைத் தருவார். ஒரு நாள் அக்கனவு தோன்றவில்லை; காரணம் புரியாது அவர் விழித்தார். 

விசாரித்ததில் அன்று அக்னீஸ்வரர், ஹரதத்தரிடம் ஏழை அந்தணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கியுண்டதாகவும் அதனால் வயிறு நிரம்பிவிட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். இதன்மூலம் ஹரதத்தரின் பெருமையைறிந்து அச்செல்வர் அவரை நாடிச் சென்று வணங்கியதாக வரலாறு சொல்லப்படுகிறது.

இவ்வூரில் பக்தர் ஒருவர் சுரைக்காய் விற்றுப் பிழைத்து வந்தார். இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான் எஞ்சியிருந்தது. அதை விதைக்கு ஆகும் என்று அப்படியே வைத்துவிட்டார். அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க, அப்பக்தர் செய்வதறியாது திகைத்தார். 

அதிதிகட்குச் சுரைக்காய் கறிக்கு ஆகாது என்றெண்ணிக் கலங்கினார். அப்போது இறைவன் அசரீரியாக "ஒரு பாதி விதைக்கு, ஒரு பாதி கறிக்கு " என்றருளிச் செய்து ஏற்று, அவருக்கு அருள்புரிந்தார் என்றொரு வரலாறு சொல்லப்படுகிறது. இதன் தொடர்பாகவே இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று. 
 



Leave a Comment