திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கூடுதலாக 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட் 


ஏழுமலையானை தரிசனம் செய்ய இம்மாதம் 16ஆம் தேதி முதல் திருப்பதி உள்ள கவுண்டர்களில் மேலும் 10,000 பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு இதுவரை ஆன்லைன் மூலம் மட்டுமே 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் கட்டுப்பாடுகளில் கொண்டுவரப்பட்டுள்ள தளர்வுகள் மற்றும் கொரோனா பரவலில் ஏற்பட்டுள்ள மந்தநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இம்மாதம் 16ஆம் தேதி முதல் திருப்பதி உள்ள கவுண்டர்களில் மேலும் 10,000 பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இதுபற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி, அறங்காவலர் குழுவின் ஒப்புதல் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருப்பதியில் கட்டப்பட்ட வரும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ஒரு கோடி ரூபாய் மற்றும் ஒன்றரை கோடி ரூபாய் என்ற அளவில் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு உதய அஸ்தமன சேவை டிக்கெட் ஒன்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உதய அஸ்தமன சேவை டிக்கெட் மூலம் வருடத்தில் ஒரு நாள் அவற்றை பெரும் பக்தர்கள் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் அனைத்து சேவைகளையும் தரிசிக்க முடியும். நன்கொடையை ஆன்லைன் மூலம் செலுத்தி உதயாஸ்தமன சேவை டிக்கெட்டுகளை பக்தர்கள் பெறுவதற்கு தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகள் நிறைவடைந்து இம்மாதம் 16ஆம் தேதி முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளில் பக்தர்கள் கலந்து கொள்வது பற்றி இம் மாதம் நடைபெறவிருக்கும் அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
 



Leave a Comment