5 அடி உயரத்தில் அஷ்டபுஜ மரகத ராஜமாதங்கி சிலை வடிக்க சிறப்பு பூஜை...
செங்கல்பட்டு மாவட்டம, திருக்கழுக்குன்றம் சாலை, பிரகாஷ் சிற்ப கலைக் கூடம் மாமல்லபுரத்தில் இன்று 11.2.2022, வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் 7.30 மணிக்குள் சுக்ல பட்சம், தசமி திதி, திருவோணம் நட்சத்திரம் கூடிய நாளில் திரு. பிரகாஷ் கலைக்கூட உரிமையாளர் ஸ்தபதி திரு. லோகநாதன் அவர்கள் திருக்கரங்களால் கலைமகள், மலைமகள், அலைமகள் என முப்பெரும் தேவியராக விளங்கும் ராஜ வாழ்வு தரும் ராஜமாதங்கிக்கு 5 அடி உயரத்தில் 8 கைகளுடன் பச்சை நிறம் கலந்த பளிங்கு கல்லில் சிலை வடிக்கும் வைபவம் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் முன்னிலையில் நடைபெற்றது.
மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 5 டன் எடையுள்ள பச்சை நிறம் கலந்த பளிங்கு கல்லுக்கு மதுரையில் உள்ள தன்வந்திரி பக்தர்களும், வாலாஜாபேட்டையில் உள்ள தன்வந்திரி குடும்பத்தினரும் சிறப்பு பூஜை செய்து பின்னர் மகாபலிபுரம் பிரகாஷ் சிற்ப கலைக்கூடத்திற்கு கொண்டு வரப்பட்டது.
எட்டு கரங்களுடன் அமையவுள்ள இத்தேவியானவள் இரு கைகளில் வீணை வாசிக்கும் விதமாகவும், கிளி, மலர், அம்பு, அங்குசம், பாசம், கரும்பு மற்றும் வீணை என 6 கைகளில் 6 விதமான பொருட்களுடன் அமர்ந்த கோலத்தில் புன்சிரிப்புடன் அழகிய முகத்துடன் அமையவுள்ளார்.
இச்சிலையானது இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 89 விக்ரகமாக விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதில் சென்னையை சேர்ந்த திரு பிரகாஷ் குடும்பத்தினர், சென்னை அம்பத்தூர் திரு. ராமசாமி குடும்பத்தினர், கரூர் காந்தி கிராமம் திரு. முத்துராஜா குடும்பத்தினர் மற்றும் ஸ்தபதி குடும்பத்தினர், தன்வந்திரி பக்தர்கள் அருகில் உள்ள மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். என தன்வந்திரி பீடத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீ ராஜமாதங்கி தேவியின் சிறப்பு
மதங்க முனிவரின் கடும் தவத்தின் பலனாக அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமானிடம் “அன்னை பார்வதியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும்” எனவும், அந்த “மகளை மணந்து கொண்டு ஈசன் தனக்கு மருமகனாக இருக்க வேண்டும்” என்றும் வரம் கேட்டார். அப்படியே சிவனும் அருளினார். அதன்படி திருவெண்காடு ஆலயத்தில் உள்ள மதங்க புஷ்கரணியில் மலர்ந்திருந்த நீலோத்பல மலரில் ராஜமாதங்கி ஆடி மாத வெள்ளிக்கிழமையில் பிறந்தாள். அரச போகம் அளிக்கும் மாதங்கி தேவியின் அங்க தேவதைகளாக ஹசந்தி சியாமளா, சுக சியாமளா, சாரிகா சியாமளா, வீணா சியாமளா, வேணு சியாமளா, லகுஷ்யாமளா என ஆறு தேவிகள் தோன்றி கலைகளின் அதிபதிகளாக மாறினர். தேவியின் மரகதப் பச்சை வண்ணம் - ஞானத்தைக் குறிக்கிறது. கைகளில் உள்ள வீணை - சங்கீத மேதை என்பதை சொல்கிறது. கிளி - பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும் ஆத்ம ஞானத்தையும் காட்டுகிறது. மலர் அம்பு - கலைகளில் தேர்ச்சியையும், பாசம், ஈர்ப்பு, சக்தியையும், அங்குசம் - அடக்கி ஆளும் திறனையும், கரும்பு - உலகியல் ஞானத்தையும் குறிப்பதாக ஐதீகம்.
Leave a Comment