திருப்பதி  ஏழுமலையான் சன்னதி திறக்கப்படும் அற்புதம்.... 


திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள். 

முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். 

அந்நேரத்தில் ""கௌசல்யா சுப்ரஜா ராம... என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும். சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க,  வெங்கடாசலபதி அருகில் "போக ஸ்ரீனிவாச மூர்த்தி" பெருமாள் விக்ரஹத்தைக் கொண்டு வந்து அமர்த்துவார்கள். அவரை முதல் நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள். அந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமரவைப்பர்.  சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும். 

சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து "நவநீத ஹாரத்தி எனப்படும் தீபாராதனை செய்யப்படும்.  "விஸ்வரூப தரிசனம் என்றும் இதை சொல்வதுண்டு.  இந்த சேவையைக் காண கட்டணம் வசூலிக்கப்படகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.

திருப்பதி மலையிலுள்ள ஆகாய கங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்துசேரும். ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள். பிரம்மோற்ஸவ காலத்தில் மட்டும் யானைமீது தீர்த்தம் எடுத்து வரப்படும். 

ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள்.  பின்னர் உத்தரணி (ஸ்பூன் போன்றது)யில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார். சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம். பின்னர் மீதி உள்ள தண்ணீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள். 

முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை.  மூலவருக்கு பதிலாக அருகிலுள்ள போக ஸ்ரீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும். அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடத்துவார்கள். 
பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் மஞ்சள் தண்ணீர் என வரிசையாக அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும்.  சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள். குடை பிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள். இதன்பிறகு தீபாராதனை நடக்கும். இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும். சுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து, சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும். 



Leave a Comment