சிரிக்கும் பெருமாள்... வியர்க்கும் திருமுகம்!


சேலம்-சென்னை தேசிய நெடுஞ் சாலையில் அமைந்திருக்கிறது  நாம மலை. இந்த மலையின் மீது ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக அழகுறக் கோயில்கொண்டு அருள்பாலிக்கிறார், ஸ்ரீநிவாசப் பெருமாள்.


ராமாயண காலத்தில் இலங்கையில் இருந்து வான் மார்க்கமாக ராமர், சீதை மற்றும் விபிஷணன் ஆகியோர் அயோத்தி செல்லும் போது, அவர்கள் சென்ற ரதத்தின் நிழல் விழுந்த இடங்களில் ஒன்றுதான், ஸ்ரீநிவாசப் பெருமாள் குடிகொண்டுள்ள இடம் என்கிறார்கள்.  இதன் மகிமையை உணர்ந்த கிருஷ்ண தேவராயர், 16-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தக் கோயிலை நிர்மாணித்தாராம்.

மூலிகைக் கற்களைக் கொண்டு, திருப்பதியில் பெருமாள் காட்சி தரும் அதே திருக் கோலத்திலேயே இங்கும் ஸ்ரீதேவி-பூதேவி சமேத ராக ஸ்ரீநிவாசப் பெருமாள் அருளாட்சி செய்வது, கண்கொள்ளா காட்சி! மேலும் திருப்பதி மலைவாழும் ஏழுமலையான், தமது சயன நேரத்தில் இங்கு வந்து உறங்கி ஓய்வெடுத்துச் செல்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பூஜையின்போது மூலவர் பெருமாளின் திருமுகத்தில் வியர்ப்பதைக் காணலாம் என்று சிலிர்ப்புடன் பகிர்ந்துகொள்ளும்  பக்தர்கள், ‘‘தரிசிக்கும் தருணத்தில் பக்தர்களின் வேண்டுகோளுக்கு  ஏற்ப சிரிப்பு, கோபம் என மாறுபட்ட முகபாவங்களைக் காட்டும் ஸ்வாமி இவர். அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்... நமது வேண்டுதல் நியாயமானதா இல்லையா என்பதை!’’ என்று பரவசம் பொங்கச் சொல்கிறார்கள். 



நாம மலையில் மிகப்பெரிய அளவில் பாறைகளால் ஆன குளம் போன்ற ‘பாலி’ ஒன்று காணப்படுகிறது. இந்த பாலியின் தீர்த்த நீர் அதிகளவு அடர்த்திகொண்டதாம். இதில், ராமனும் சீதையும் நீராடியதாக நம்பிக்கை. அதேபோல் அடிவாரத்தில் கிணறு ஒன்று உள்ளது. பெருமாளைத் தரிசிக்கும்போது, இந்தக் கிணற்று நீரை தீர்த்தமாகத் தருகிறார்கள். மூலிகைத் தன்மை கொண்ட இந்த தீர்த்தத்தை நோய் தீர்க்கும் அமிர்தமாகக் கருதுகின்றனர்.

ஒருமுறை இந்தக் கோயிலின் அர்ச்சகர் ஒருவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘‘ராமானுஜர் இல்லாததே இத்தலத்தின் ஒரே குறை’’ என்றாராம். அந்தக் குறையைக் களையும் விதம், ஸ்ரீராமானுஜர் விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர், பக்தர்கள். வடக்கு நோக்கி அருளும் இந்த ராமானுஜரின் திருமுன் பாலைச் சமர்ப்பித்து சில நிமிட வேண்டு தலுக்குப் பிறகு, பாத்திரத்தை திறந்தால் பால் திரிந்து தயிராகியிருக்குமாம். இப்படி பால் திரிந்துபோனால், பக்தர்களுக்கு ராமானுஜரின் திருவருள் பரிபூரணமாகக் கிடைத்துவிட்டது என்பது நம்பிக்கை.

இத்திருத்தலத்துக்கு வரும் பக்தர்கள் மூலவரை வணங்கிய பின், தங்கள் வேண்டுதல் நிறைவேறுமா என்பதை அறிய, திருவுளச் சீட்டு போட்டு இறைவனிடம் உத்தரவு கேட்கின்றனர். துளசி, மஞ்சள், குங்குமம் ஆகிய மூன்றையும் தனித்தனி சீட்டுகளில் பொதிந்து சந்நிதியில் வைத்து, குழந்தைகள் மூலம் சீட்டுகளை எடுத்து பார்க்கின்றனர். அதில் துளசிச் சீட்டு வந்தால் நினைத்தது உடனே நிறைவேறும்; மஞ்சள் வந்தால் காரியத்தில் சற்று நிதானம் வேண்டும் என்று அர்த்தமாம்.
வாழ்நாளில் ஒரு முறையாவது  திருப்பதி சென்று ஸ்ரீநிவாசப் பெருமாளை வணங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் பொருளாதாரம், வயது முதிர்வு போன்ற காரணங்களால் திருப்பதி சென்று பெருமாளை வணங்காமல் தவித்து மருகும் அன்பர்களும் உண்டு. அப்படியான பக்தர்களுக்கு, திருப்பதிக்குச் சென்று வந்த புண்ணிய பலனை தந்தருளும் நாமமலை ஸ்ரீநிவாசப் பெருமாளை நீங்களும் ஒருமுறைத் தரிசித்து வாருங்களேன்; உங்கள் வருங்காலம் சிறக்கும், வாழ்க்கைச் செழிக்கும்!

 



Leave a Comment