விடியலுக்கு  முன்  விளக்கேற்றி  வழிபட்டு  வாழ்வில் விடியலை  பெறுவோம்....


விளக்கை   அடிக்கடி  துடைக்கவோ,  கழுவவோ  கூடாது.   வாரத்திற்கு  ஒருமுறை  கழுவினால்  போதும்.   இடைப்பட்ட  காலத்தில் விளக்கில்  ஊற்றிய  எண்ணெய்  அல்லது  நெய்  தீர்ந்து  திரி  எரிந்து  விளக்கில்  கரி படித்துவிட்டால்  கழுவலாம். நிலை  வாசலில்  கீழே இருந்து  ஒரு  அடி உயரத்துக்கு  மஞ்சள்  பூசி  சந்தனம் குங்குமம்  பொட்டு  வைத்திருக்க  வேண்டும்.

விளக்குக்கு சந்தனம், குங்குமம் வைத்து, எண்ணெய்  அல்லது  நெய்  ஊற்றிய பின்னர்  பஞ்சு  திரி போடுங்கள். (இதுதான் சரியான  முறை).  இந்த  வேலைகளை  முந்தய  நாளிலே  செய்து,   ஒரு  திரி  போட்ட  காமாட்சி விளக்கும்,   காமாட்சி  விளக்குக்கு இரு புறமும் வைக்க  ஐந்து  திரி  போட்ட  குத்துவிளக்கு   இரண்டும்   தயாராக  வைத்திருங்கள்.

குளித்துவிட்டு  பிரம்ம முகூர்த்தத்தில்  விளக்கு ஏற்றுவது நற்பலன்களைத் தரும். 

பின்பு  வீட்டையும்  பூஜை அறையையும்  சுத்தம் செய்து,  வாசலை  பெருக்கி  தண்ணீர்  தெளித்து  கோலம்  இட்டு (பச்சரிசி மாவினால்  கோலம்  இட்டால்  சிறப்பு),   அதி காலை   3 மணியிலிருந்து 5 மணிக்குள்   ப்ரம்ம  முகூர்த்தத்தில்  தலை வாசல்  நிலைப்படியில்  விளக்கு  ஏற்றி  பின்பு  வீட்டில்  பூஜை  செய்யும்  இடத்தில்  அதிகாலை 3 மணியிலிருந்து 5  மணிக்குள்  விளக்கு  ஏற்ற  வேண்டும்.

பஞ்சு  அல்லது  தாமரை  தண்டு  திரி  மட்டுமே  வீட்டில்  உபயோக  படுத்த வேண்டும்.  பல  எண்ணெய்களை  கலந்தோ,  நெய்யுடன்  எண்ணெய்  கலந்தோ,  கலர்  துணி திரி,  நூல்  திரி போட்டோ   வீட்டில்  தீபம்  ஏற்றக்கூடாது;  தேவைப்பட்டால்    அப்படி  கோவில்களில்  மட்டுமே தீபம்  ஏற்றலாம். கோவில்களிலும்  எள்ளை எரிக்கக்கூடாது.

முதலில்  வீட்டு   நிலை வாசலில் விளக்கை ஏற்றி விட்டு பின்பு பூஜை அறைக்கு சென்று விளக்கு ஏற்ற வேண்டும். முக்கோடி முப்பத்து தேவர்களும், அகிலம் ஆளும் தெய்வங்களும் பிரம்ம முகூர்த்தத்தில் பூமியில் உலா வருகிறார்கள். எனவே வாசல் தெளித்து கோலம் போட்டு, நிலை வாசலில் விளக்கு ஏற்றி வைத்தால் அவர்கள் நம் வீட்டிற்குள் வருவார்கள். அதன் பின்பு பூஜை அறையில் இருக்கும் தெய்வங்களுக்கு விளக்கு ஏற்றி வைக்கலாம்.

இதுபோல விளக்கு ஏற்றி   ஏதாவது  நெய்வேத்தியம் (சிறிது  வெல்லம்  வைத்தாலும்  போதும்)  படைத்து  வழிபடும்போது,   வீட்டுக்குள்  வந்த  முக்கோடி முப்பத்து தேவர்களும், அகிலம் ஆளும் தெய்வங்களும்,  உங்கள்  பூஜை  அறையில்  நிரந்தரமாக  இருக்கும்  உங்கள்  குலதெய்வங்களும், இதர  விருப்ப  தெய்வங்களும்,   உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் அப்படியே நடக்கட்டும் என்று ஆசீர்வதித்து வாழ்த்துவார்கள்.

விளக்கேற்றி  விளக்கு  எரியும்போது  தூங்கக்கூடாது. பெண்கள்  விளக்கு  ஏற்றுவதே  மிகவும்  சிறப்பான  பலன்களை  தரும்.  தவிர்க்க  முடியாத  நேரங்களில்  ஆண்கள்  விளக்கேற்றலாம். அதில்  தவறில்லை. பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கை ஏற்றி வழிபட்டால் நீங்கள் மனதில் நினைத்த வேண்டுதல்கள் எதுவாகினும் அது உடனே நிறைவேறும்.



Leave a Comment