சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபடும் முறை.....


பொங்கல் பண்டிகையின் போது பெண்கள் சூரியன் உதிப்பதற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு, வீட்டு முற்றத்தில் நீர் தெளித்து கோலமிட வேண்டும். வீட்டின் முற்றத்தில் ஒரு பகுதியை பசு சாணத்தால் மெழுகி, வெள்ளையடித்து, காவி பூச வேண்டும். அரக்கு நிறம் துர்க்கா தேவிக்குரியது. துன்பங்கள் விலகி மங்கல வாழ்வும், இன்பமும் நிலைக்கதான் காவி பூசப்படுகிறது.

அதன் பிறகு அந்த பகுதியை மாவிலை, வாழை, கரும்பு மற்றும் மலர்களால் அலங்கரித்து, பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும். பின்னர் குத்து விளக்கேற்றி, பூரண கும்பம் வைத்து வெற்றிலை, பாக்கு, தேங்காய் முதலிய மங்கல பொருட்களையும் வைத்து படைக்க வேண்டும்.

விநாயகரை முதலில் மனதில் நினைத்து, இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு புதுப்பானையை எடுத்து அதன் வாய்ப்புறத்தில் மஞ்சள் இலை, மாவிலை கட்ட வேண்டும். பானையின் மேல்புறத்தில் திருநீறை குழைத்து, 3 இடங்களில் பூசி, சந்தனம், குங்குமத்தால் திலகமிடவேண்டும்.

பானைக்குள் பசும்பாலும், நீரும் விட்டு நிரப்பி தூபதீபம் காட்டி, கற்பூரதீபத்தினால் அடுப்பில் நெருப்பை உண்டாக்கி பற்ற வைக்க வேண்டும். பின்னர் தம்பதியராக சேர்ந்து சூரியனை வணங்கி, இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்து பானையை தூக்கி அடுப்பில் வைக்க வேண்டும். பானையில் பால் பொங்கி வரும் போது பொங்கலோ, பொங்கல் என்று குரல் எழுப்பிக்கொண்டே பச்சரிசியை இருகைகளாலும் அள்ளி போட வேண்டும். பின்னர்  சூரியபகவானை வணங்கியபடி பானையை 3 முறை சுற்றி மூட வேண்டும்.

பொங்கிய பொங்கலை 3 தலைவாழை இலையில் இட்டு படைத்து பழங்கள், கரும்பு, முதலியவற்றை கொண்டு அர்ச்சித்து, தூபதீபம் காட்டி சூரியபகவானை வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். தீபாராதனை காட்டும் போது குலதெய்வத்தையும், மூதாதையர்களையும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
 



Leave a Comment