கெட்ட சக்திகளை வெளியேற்றும் போகி காப்பு.....


அந்தக் காலத்தில் கூரை மற்றும் பனை ஓலை வீடுகள் தான் அதிகம் இருக்கும். பழைய கூரைகளையும், ஓலைகளையும் எரிப்பதற்கு போகி பண்டிகையை பயன்படுத்திக் கொண்டார்கள். போகி பண்டிகை அன்று வீட்டை சுத்தம் செய்வதால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் வெளியேற காப்பு கட்டுதல் என்ற வழிமுறையை கடைபிடித்தார்கள்.

காப்பு கட்டுதல் என்பது வேப்பிலை, பீளைப்பூ, கருந்துளசி, தும்பை இலை, ஆவாரம்பூ ஆகிய ஐந்து மூலிகை பொருட்களைக் கொண்டு ஒன்றாக சேர்த்து கட்டி காப்பாக வீடுகளின் கூரையில் சொருகி வைப்பார்கள். இப்படி வீட்டில் சொறுகி வைப்பதால் வீட்டிற்குள் எந்த ஒரு பூச்சிகளும் வராது. மேலும் இவைகள் தெய்வீக மூலிகை என்பதால் எந்த ஒரு துஷ்ட சக்தியும் வீட்டிற்குள் நுழைய முடியாது.

வேப்பிலையை தோரணமாக கட்டுவதும், சொருகி வைப்பதும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். நோய்க் கிருமிகளின் தாக்குதல்கள் இன்றி ஆரோக்கியமான முறையில் இருப்பதற்கு உதவியாக இருக்கும். வேப்பிலை மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்துக் கொண்டால் போதும்.

விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் அந்த சூரியனுக்கும்,  மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் நம் முன்னோர்கள் தேர்ந்தெடுத்த இந்த நாள் தான் தைத்திருநாளாக கொண்டாடப்படுகிறது. போகி அன்று செய்யக்கூடிய ஒரு நிகழ்வுதான் இந்த காப்பு கட்டுதல் ஆகும். சேவூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நேற்று தங்களது வீடுகளை சுத்தம் செய்து, சுவர்களுக்கு வெள்ளையடித்து  தரைகளை சாணத்தால் மெழுகியிருந்ததை காணமுடிந்தது.
 



Leave a Comment