தொன்மை, பழமை நிறைந்த பிள்ளையார் நோன்பு


பிள்ளையார் நோன்பு நமது கலாச்சாரத்தின் பாரம்பரியத்தின் ஒரு இன்றியமையாத முக்கியமான அடையலாம். இந்த நோன்பு முன்னொரு காலத்தில் செட்டிநாட்டை சுற்றியுள்ள நகரத்தார்களால் கடைபிடிக்கப்பட்டு பின்னாளில் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்ற மேன்மைகள் மிகுந்த நோன்பாக இந்த பிள்ளையார் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.
 
பல்வேறு ஆண்டுகளாக நகரத்தார்களின் மிகுந்த நம்பிக்கைக்குரிய நோன்பாக கடைபிடிக்கப்பட்டு வரும் பிள்ளையார் நோன்பு ஆண்டுதோறும் காத்திகை மாத சஷ்டி திதியும் சதய நட்சத்திரமும் சேர்ந்த நன்னாளில் கொண்டாடப்படுகிறது.

திருக்கார்த்திகையில் இருந்து 21ஆம் நாள் கொண்டாடப் படும் நோன்பு பிள்ளையார் நோன்பு ஆகும். சஷ்டித்திதியும் சதயநட்சத்திரமும் கூடிவரும் நாளில் இந்த நோன்பு  கொண்டாப்படுகிறது. இந்த நோன்பானது மாலையில் அனுஷ்டிக்கப்படும் நோன்பு ஆகும்.

முதல் நாள் வீடுகளை சுத்தமாக கூட்டி மொழுகி மாவிலைத் தோரணம் கட்டுவார்கள். அதனையடுத்து நோன்பு அன்று நடு வீட்டில் கோலம் இட்டு அப்பம் ,கருப்பட்டிப் பணியாரம், வெள்ளப்பணியாரம், கந்தரப்பம் ,உளுந்துவடை, மோதகம், உப்புகொழுக்கட்டை ,சீடை ,அதிரசம் என பல்வேறு வகையான பலகாரங்கள் செய்து வைத்து ஐந்து வகையான பொரிகளை வீட்டிலே வறுத்து பிள்ளையாருக்கு படைத்தது மகிழ்வர்.

நகரத்தார்கள் இடையே பிள்ளையார் நோன்புக்கு என்று பிறந்த வீட்டில் இருந்து சீராக அரிசியும் வெல்லமும் கொடுத்தனுப்பும் பழக்கம் அன்றில் இருந்து இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது. அதுபோலவே நகரத்தார்களின் திருமணத்தில் வெள்ளிச்சாமான்களுடன் வெள்ளிப் பிள்ளையாரும் உடன் வைப்பர் இது இப்போதும் நடைமுறையில் உள்ளது.
 
வீட்டில் உள்ள மனைப்பலகையில் மாக்கோலம் இட்டு பிள்ளையார் படத்தை வைத்து பூச்சூட்டி உடன் வெள்ளிப்பிள்ளையாருக்கும் பூச்சூட்டி இருபுறமும் ஒரு குச்சியில் கண்ணுப்பிள்ளைப்பூ, ஆவாரம்பூவும், மாவிலையும் வைத்து கட்டி இதை விநாயகரின் இருபுறத்திலும் வைத்து விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்வார்கள்.

வீட்டில் உள்ளோரின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி கருப்பட்டிப் பாகையும் அரிசிமாவையும் பிசைந்து செய்த மாவினால் கூம்பு வடிவில் பிள்ளையார் பிடித்து வைத்து அந்த பிள்ளையார் பூஜையை செய்யவும். 

இந்தக் கருப்பட்டிப் பிள்ளையாரின் மீது 21 நூல்இழைகள் கொண்ட திரியைப் போட்டு நெய் ஊற்றி நுனி வாழையிலையை விரித்து வைத்து அதன் நுனியில் வெள்ளி அகல் விளக்கு வைத்து மலர்ச்செண்டு சாற்றி, தீபம் ஏற்றி வைக்கின்றனர்.

அதன் பின்னர் பிள்ளையாருக்குப் பொரியினால் அபிஷேகம் செய்கின்றர்,அபிஷேகம் செய்யும் போது சங்கு ஊதுகின்றனர் அதன் பின்னர் கருப்பட்டி அப்பம், பொரி, முதலான 21 வகைப் பலகாரங்களை நிவேதனம் செய்து, தேங்காய் உடைத்துப் பழம் வெற்றிலை பாக்கு வைத்துப் படைத்துத் தீபம் காட்டி வழிபடுகின்றனர்.

ஒரு தடுக்கு போட்டு அதில் வீட்டுக்கு பெரிய ஆண் மகன் அமர்ந்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து விநாயகர் அகவல் படித்த பின் நிவேதனம் செய்து தீபம் பார்த்த பின் அனைவரும் இலை எடுத்துக் கொள்வார்கள். வீட்டில் யாரேனும் முழுகாமல் இருந்தால் வயிற்றில் உள்ள பிள்ளைக்கும் சேர்த்து இரண்டு இலை எடுத்துகொள்வார்கள்.

வழிபாட்டின் நிறைவாக, இந்த வழிபாட்டினை முன்னின்று செய்யும் குடும்பத் தலைவன், கூம்பு வடிவான பிள்ளையாரின் உச்சியில் தீபம் எறிந்து கொண்டிருக்கும் போது ஜோதியுடன் சுடரோடு பிள்ளையாரை எடுத்து அப்படியே தனது வாயினுள் போட்டுக் கொள்கின்றனர்.



Leave a Comment