திருப்பதி திருமலைக்கு செல்ல மூன்றாவது பாதை அமைகிறது..... 


கடப்பா மாவட்டம் குக்கலதொட்டியில்  இருந்து திருப்பதி மலைக்கு அன்னமய்யா மார்க்கம் வழியாக மூன்றாவது மலைப்பாதைக்கு  திட்ட அறிக்கை தயார் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

திருப்பதி ஏழுமலையான் மீது 32,000 கீர்த்தனைகளை இயற்றிப் பாடிய தாளப்பாக்கம் அன்னமய்யா தன்னுடைய வாழ்நாளில் கடப்பா மாவட்டத்தில் உள்ள குக்கலதொட்டி பகுதியில் இருந்து திருமலைக்கு நடந்து  சென்றார்.

பலமுறை அந்த வழியாக அன்னமய்யா திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு நடந்து சென்றிருக்கிறார். எனவே அந்த பாதைக்கு அன்னமய்யா மார்க்கம் என்றும் பெயர் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் அந்த வழியில் பக்தர்கள் யாரும் இப்போது நடந்து செல்வது கிடையாது.

இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக திருப்பதி மலைப்பாதையில் உள்ள 2வது பாதை கடும் சேதமடைந்தது. இதற்குமுன் எப்போதும் ஏற்படாத வகையில் மலைப்பாதை சேதமடைந்த காரணத்தால் மூன்றாவது பாதை ஒன்றை அமைக்க வேண்டிய கட்டாயம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஏற்பட்டுள்ளது.

 இந்த நிலையில் அன்னமய்யா மார்க்கம் வழியாக மூன்றாவது மலைப்பாதை அமைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அதிகாரிகளுடன் அன்னமய்யா மார்க்கம் பகுதிக்குச் சென்று திருப்பதி மலைக்கு மூன்றாவது சாலை அமைப்பது பற்றி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இங்கிருந்து திருப்பதி மலையில் உள்ள பாரிவேட்டை மண்டபம்  23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

 இதே வழியில் பாரிவேட்டை மண்டபம் பகுதிக்கு அன்னமய்யா நடந்து சென்றிருக்கிறார். எனவே மிகவும் புராதனமான இந்த வழியில்  23 கிலோமீட்டர் தூரம் திருப்பதி மலைக்கு மூன்றாவது சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்ய தேவஸ்தான பொறியியல் துறை அதிகாரிகளுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.



Leave a Comment