திருப்பதியில் புத்தாண்டு, ஏகாதசி நாட்களில் பரிந்துரை கடிதங்கள் அனுமதியில்லை.... 


ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி நாட்களில் சாமி தரிசனத்திற்கான பரிந்துரைகளை கடிதங்களுக்கு அனுமதி கிடையாது.

ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி முதல் நாள் மற்றும் ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் திறந்திருக்கும் ஜனவரி 13-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஆகிய நாட்களில் சாமி தரிசனத்திற்காக முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களை ஏற்க இயலாது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஆங்கில புத்தாண்டு தினம் மற்றும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் திறந்திருக்கும் நாட்கள் ஆகிய நாட்களில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஆர்வம் காட்டுவது வழக்கம்.

 இதனால் அத்தகைய நாட்களில் திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே முக்கிய நாட்கள்  பிரமுகர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தரிசன டிக்கெட்டுகளை வழங்கினால் சாதாரணமாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே எதிர்வரும் ஜனவரி 1 மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் திறந்திருக்கும் நாட்கள் ஆன 13-ஆம் தேதி முதல் 22ம் தேதி வரையிலான நாட்களில் சாமி தரிசனத்திற்காக முக்கிய  பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்கள் பேரில் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படாது.

முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அவர்களுடைய தனிப்பட்ட பரிந்துரை கடிதங்களின் அடிப்படையில் டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படும். திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் 2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று, அல்லது 48 மணி நேரத்திற்கு முன் பெறப்பட்ட கரோனா நெகட்டிவ் சான்று ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக உடன் கொண்டு வர வேண்டும்.

ஜனவரி மாதம் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை திருப்பதி மலையில் உள்ள தங்கும் அறைகளை முன்பதிவு செய்ய இயலாது. தங்கும் அறைகள் தேவையான பக்தர்கள் திருப்பதி மலைக்கு நேரடியாக வந்து அறைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். 

ஜனவரி மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை தேவஸ்தானத்திற்கு நன்கொடை வழங்கிய பக்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தங்கும் அறைகளை ஒதுக்கீடு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி மலையில் உள்ள மொட்டை போடும் மண்டபங்களில் தேவையான அளவிற்கு ஊழியர்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

 முக்கிய நாட்களில் அதிகாலை 4:00 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பக்தர்களுக்கு திருப்பதி மலையில் இலவச உணவு வழங்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் எச்சரிக்கை காரணமாக திருப்பதி மலையில் முழு அளவில் கரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.



Leave a Comment