சிம்ம ராசி அன்பர்களுக்கு 2022 ஆம் ஆண்டு பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்)
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக் (வ), சனி - களத்திர ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரக மாற்றங்கள்:
21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14-04-2022 அன்று குரு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வருடம் எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சின்ன சின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலைத் தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை அலர்ஜி சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு திருப்தி தரும். பெரியோர் உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.
தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும். தொழிலாளர்கள் அவ்வப்போது பிரச்சினை எழுப்பலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.
பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சனை தீர பாடுபடுவீர்கள். காரிய தடை, தாமதம் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்.
கலைத்துறையினருக்கு முன்பு கிடைத்ததை விட அதிக பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கும். லாபம் அதிகமாகும். வெளியூர் பயணங்கள் திருப்தி அளிக்கும்.
அரசியல்துறையினருக்கு மேலிடத்தை அனுசரித்து செல்வது நன்மை தரும். வேலைப் பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவீர்கள். நண்பர்களிடம் ஒத்துழைப்பும் இருக்கும்.
மகம்:
இந்த வருடம் தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பந்த பாசம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை.
பூரம்:
இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம். பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம்.எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம்.
உத்திரம் 1ம் பாதம்:
இந்த வருடம் கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மாணவர்கள் தனது முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. எடுத்த காரியங்களில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம்: சிவபுராணம் சொல்லி சிவனை வணங்கி வர குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உத்தியோகம் நிலைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்
அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன் - குரு - செவ்வாய்
எண்கள்: 1, 2, 9
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீருத்ராய நமஹ என்ற மந்திரத்தை தினமும் 36 முறை சொல்லவும்.
செல்ல வேண்டிய ஸ்தலம்: சிவன் கோவில்களுக்குச் சென்று வரவும்.
மலர் பரிகாரம்: வில்வத்தை சிவனுக்கு அர்பணித்து வணங்கி வரவும்.
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
Leave a Comment