திருப்பதி ஏழுமலையானை நாள் முழுவதும் தரிசிக்க...... 


திருமலை திருப்பதி தேவஸ்தான குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ஒரு கோடி அல்லது ஒன்றரை கோடி ரூபாய் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு ஏழுமலையானை நாள் முழுவதும் தரிசிக்கும் வகையில் உதய அஸ்தமன சேவை டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்து இருக்கிறது. 

 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை சுப்ரபாத சேவையில் துவங்கி கோவில் மூடுவதற்கு முன் நடத்தப்படும் ஏகாந்த சேவை வரை ஒரே நாளில் அனைத்து சேவைகளையும் பக்தர்கள் கண்டு தரிசிக்க வசதியாக உதய அஸ்தமன சேவை என்ற பெயரிலான டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டன.

இதற்கான கட்டணம் ஒரு லட்ச ரூபாயில் துவங்கி  பின்னர் 10 லட்ச ரூபாயாக உயர்ந்தது. இந்தநிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு உதய அஸ்தமன சேவை டிக்கெட் விநியோகத்தை தேவஸ்தானம் பல்வேறு காரணங்களால் நிறுத்தியது.

 தற்போது திருப்பதியில் உலகத்தரம் வாய்ந்த குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டி வருகிறது. கடந்த பிரம்மோற்சவத்தின் போது திருப்பதிக்கு வந்திருந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அந்த மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கான இருதய சிகிச்சை பிரிவை திறந்து வைத்தார்.

 மாநில பிரிவினை ஏற்பட்டது முதல் ஆந்திராவில் தேவையான வசதிகள் உடைய குழந்தைகள் நல மருத்துவமனை இல்லை. எனவே முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவின்பேரில் அந்த குறையை தீர்த்து வைக்கும் முயற்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது.

 இதற்கு பல நூறு கோடி ரூபாய் பணம் தேவை ஆகும். எனவே இந்த தொகையை பக்தர்களிடம் இருந்து நன்கொடை மூலம் திரட்ட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில் திருப்பதியில் கட்டப்பட்டு வரும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ரூ 1 கோடி நன்கொடை அளிக்கும் பக்தருக்கு அந்த பக்தர் சனிக்கிழமை துவங்கி வியாழக்கிழமை வரை வருடத்தில் ஒரு நாள் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் அனைத்து சேவைகளையும் கண்டு தரிசிக்க தேவையான உதய அஸ்தமன டிக்கெட் வழங்கப்படும்.

அந்த டிக்கெட் மூலம் 5 பக்தர்கள் ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் நடைபெறும் அனைத்து சேவைகளிலும் கலந்து கொள்ளலாம்.  ஒன்றரை கோடி ரூபாய் நன்கொடை அளிக்கும் பக்தருக்கு வெள்ளிக்கிழமை அன்று உதய அஸ்தமன சேவையில் கலந்து கொள்ளும் வகையில் டிக்கெட் வழங்கப்படும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் ஏழுமலையான் கோவிலில் அபிஷேக சேவை நடைபெறும். ஏழுமலையான் கோவில் அபிஷேக சேவைக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு 30 ஆண்டுகள் வரை நடைபெற்று முடிந்து விட்டன.  எனவே அந்த அளவிற்கு தட்டுப்பாடில் இருக்கும் அபிஷேக சேவை வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்போது உதய அஸ்தமன சேவை மூலம் ஏழுமலையானின் அபிஷேக சேவையில் கலந்து கொள்ளலாம் என்பதால் அன்றைய தினம் உதயாஸ்தமன சேவை டிக்கெட் வாங்க பக்தர்கள் ஒன்றரை கோடி ரூபாய் நன்கொடை செலுத்த வேண்டும். இந்த வகையில் 536 உதய அஸ்தமன சேவை டிக்கெட்டுகளை மருத்துவமனைக்கு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வழங்கி ரூ.550 கோடி ரூபாய் நன்கொடை திரட்ட தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. முதலில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்  உதய அஸ்தமன சேவை டிக்கட்டுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



Leave a Comment