வைகுண்ட ஏகாதசி..... திருப்பதியில் 10 நாட்கள் சொர்க்க வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி தினமான ஜனவரி மாதம் 13ஆம் தேதி முதல் பத்து நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்க வாசல் திறந்திருக்கும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஓய்.வி. சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அடுத்த மாதம் 13ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி தினமாகும். அன்று முதல் பத்து நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் திறந்திருக்கும். எனவே பக்தர்கள் பத்து நாட்களும் ஏழுமலையானை தரிசித்து வைகுண்ட வாசல் பிரவேசம் செய்யலாம்.
பிரம்மோற்சவ நாட்களில் செய்யப்பட்டது போல் பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த பட்டியல் இனத்தவர்கள், மீனவர்கள் ஆகியோரை சொர்க்க வாசல் திறந்திருக்கும் நாட்களில் திருப்பதி மலைக்கு அழைத்து வந்து இலவசமாக தரிசனம் செய்யும் வசதியை செய்து கொடுக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டால் புத்தாண்டு முதல் அதிகளவிலான பக்தர்கள் ஏழுமலையானை இலவசமாக தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளிலும் பக்தர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக ஸ்ரீவெங்கடேஸ்வரா நாம கோடி புத்தகங்கள் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் செயல்படும் ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் நல மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெறும்.
இதற்காக நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஏழுமலையான் கோவிலில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை நடைபெறும் அனைத்து சேவைகளையும் வருடத்தில் ஒருநாள் தரிசிக்கும் வகையிலான உதய அஸ்தமன சேவை டிக்கெட்டுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் நன்கொடை உதவியுடன் திருப்பதி மலையில் அனுமன் அவதரித்த இடத்தில் அவருடைய தாய் அஞ்சனா தேவிக்கு முழு அளவிலான ஆலயம் ஒன்றை ஏற்படுத்தவும், ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் நாத நீராஞ்சன மண்டபம் பகுதியில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
Leave a Comment