தனி சிறப்பு கொண்ட வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம் சபரிமலை.....!


சைவம் மற்றும் வைணவ பிரிவுகளின் ஒற்றுமை உருவமாக பார்க்கப்படுகிற புண்ணிய கோவில் சபரிமலை.  மதுரையில் இருந்து தன் சொந்த அமைச்சர்களால் உயிருக்கு ஆபத்து என கருதி சென்ற ராஜசேகர பாண்டியன் திருவிதாங்கூர் மன்னனால் உதவப்பட்டு பந்தள தேசத்து மன்னனாக ஆட்சி செய்தான். அவனின் வளர்ப்பு மகனே ஸ்ரீ ஐயப்பன்.

ராஜசேகர பாண்டியன் பம்பை நதிக்கரையில் வேட்டையாட சென்றபோது கண்டெடுத்த கடவுள் அவதாரமே குழந்தை மணிகண்டன். 12 வயது வரை மணிகண்டன் மனித உருவமாக வளர்ந்து தன அவதார நோக்கம் முடிந்த உடன் தியானம் செய்ய சென்ற இடமே இன்றைய சபரிமலை . பந்தள வம்சத்தை சார்ந்த நபர்கள் இன்றும் சபரிமலை செல்வதில்லை. தன் தந்தை ராஜசேகர பாண்டியன் சபரிமலை வந்தால் ஐயப்பன் எங்கு எழுந்துவிடுவாரோ என்று அவர் கால்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. அதனால் தான் அந்த ஐதீகம் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. 

பந்தள மன்னர் ராஜசேகர பாண்டியன் தன் வளர்ப்பு குழந்தை ஐயப்பனுக்காக செய்ததே திருவாபரண பெட்டி. இதில் தங்கத்தில் சிறிய வடிவில் புலி,யானை, வாள், மாலை போன்றவை உள்ளன.. ஓலை சுவடிகளை இன்றும் காணலாம். ராஜசேகர பாண்டியன் தன் மனைவி தலைவலி என்று சொல்லி புலியின் பாலை அடர்ந்த காட்டிற்குள் ஐயப்பனை கொண்டு வர சொன்னபோது இரண்டு முடிச்சுக்களில் பாதுகாப்பிற்கு தேவையான பொருட்களை கொடுத்து அனுப்பியதே இன்று இருமுடியாக ஐயப்ப பக்தர்கள் பின்பற்றுகின்றனர்.

இந்தியாவில் கோவில் வளாகத்தில் அரேபிய முஸ்லிம் வாவர் சுவாமியாக காட்சி அளிப்பது சபரிமலையில் மட்டுமே. வாவர் ஐயப்பனின் நெருங்கிய நண்பர். இந்த சன்னதியின் பூஜைச்சடங்குகள் முஸ்லிம் அர்ச்சகர்களால் செய்விக்கப்படுகிறது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டு.

ஹரிவராஸனம் விச்வமோஹனம் என்ற புகழ்பெற்ற கே ஜே யேசுதாஸ் பாடிய பாடலே நடை அடைப்பில் ஐயப்பன் உறங்குவதற்காக இசைக்கப்படுகிறது. இந்த பாடலை எழுதியவர் கம்பங்குடி ஸ்ரீகுளத்துஐயர். இவர் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி. 

பரசுராமரால் பிரதிஷ்டை பண்ணப்பட்ட ஐயப்பன் சிலை 1950 ல் தீவிபத்தில் சேதம் அடைந்தது.  இன்று அந்த சிலை உருக்கபட்டு கோவில் மணியாக கொடி மரம் அருகே காட்சி அளிக்கிறது. தீவிபத்தை தொடர்ந்து சிலையை யார் செய்ய வேண்டும் என்ற தேவபிரசன்ன குடவோலை முறைப்படி, ஐயப்பன் சந்நிதியில் சீட்டுப் போட்டு பார்க்கப்பட்டது.  அதில் மதுரை நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையும் பி.டி.ராஜனும் பெயர்கள் வந்தன. அவர்கள் வழங்கிய விக்கிரகத்தைத்தான் இன்றைக்கும் தரிசித்துக் கொண்டிருக்கிறோம். 

அந்த சிலை கும்பகோணத்தில் அடுத்த சுவாமிமலையில் தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் ராமசாமி ஸ்தபதியால் செய்யப்பட்டது. கேரளாவில் கோயில்களில் பராமரிப்பு பணிகளோ, முக்கிய மாற்றங்களோ நடத்த வேண்டும் என்றால் கடவுளிடம் அனுமதி கேட்பதற்காக ‘தேவபிரசன்னம்’ என்ற பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படியே இன்றும் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டுமெனில் தேவபிரசன்னம் செய்யப்பட்டு கடவுளின் அனுமதி பெற வேண்டும் என்பது கோவில் நிர்வாகத்தின் முடிவு. 



Leave a Comment