கார்த்திகை சோமவார விரதம் தரும் பலன்கள்


சிவபெருமானுக்கு என்று எத்தனையோ விரதங்கள் இருப்பினும் கார்த்திகை சோம வார விரதத்திற்கென்று தனித்துவம் உண்டு. இந்த விரதத்தை அனுஷ்டித்த சந்திரன் சிவபெருமானின் தலையில் பிறையாக அமரும் பாக்கியத்தைப் பெற்றான். அந்தளவுக்கு சோமவார விரதம் மகிமை வாய்ந்தது. சந்திரன் மனோகாரகன். திங்கட்கிழமை சந்திரனுக்குரிய நாளாகும். இந்த விரதத்தை பெரும்பாலும் பெண்கள் கடைப்பிடிக்கிறார்கள். ஆண்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். அல்லது தம்பதியர்கள் இருவரும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம். அவ்வாறு கடைப்பிடிக்கும் போது சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.

சந்திரனின் புகழை அறிந்த தட்சன் தனது 27 பெண்களையும் சந்திரனுக்கு மணமுடித்துக் கொடுத்தான். ஆனால் சந்திரன் தனது 27 மனைவியரில் ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டினான். இதன் காரணமாக மற்ற மனைவியர் எல்லோரும் கவலையுற்றனர். தங்களது மனக்குமுறல்களை தந்தை தட்சனிடம் தெரிவித்தனர்.

தட்சனும், சந்திரனை அழைத்து ‘அனைத்துப் பெண்களிடமும் அன்பாக இரு’ என்று கூறினான்.  ஆனால் அதன் பிறகும் சந்திரனிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இதனால் கோபுமுற்ற தட்சன், “அழகின் மீது கொண்ட கர்வத்தால் தானே இப்படி நடந்து கொள்கிறாய். நீ நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போவாய் என்றும், உனது கலைகள் யாவும் மங்கட்டும் என்றும் சாபமிட்டான்.

தட்சனின் சாபத்தால் சந்திரன் தனது பொலிவை இழந்து நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வந்தான். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தான். முனிவர்களின் வழிகாட்டுதல்படி சிவபெருமானை வேண்டி சோமவார விரதம் மேற்கொண்டான். சந்திரனின் விரதத்தால் இரக்கம் கொண்ட சிவபெருமான் அவனது சாபத்தை நீக்கி, தனது தலையில் பிறையாக சூடிக் கொண்டார். இதனாலேயே சிவபெருமான் சந்திரசேகரர், சந்திரமௌலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சந்திரன், சிவபெருமானிடம் “ஐயனே சோம வாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருக்கும் மக்களுக்கு, நற்கதியைக் கொடுத்து அருள வேண்டும்” என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அப்படியே அருளினார். 

சோமவார விரதத்தை கார்த்திகை முதல் சோம வார திங்கள்கிழமையிலிருந்து மேற்கொள்ளலாம். ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம். இல்லையென்றால் 1, 2, 3, 12, 14 ஆண்டுகள் விரதம் மேற்கொள்வேன் என்று மனதில் சங்கல்பம் செய்து கொண்டு விரதத்தை தொடங்கலாம். அவ்வாறு செய்ய இயலாதவர்கள் குறைந்த பட்சம் கார்த்திகை மாதம் வரும் சோம வாரங்களில் மட்டுமாவது இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

சிவபெருமானை வேண்டி சோமவார விரதம் மேற்கொண்டால் முன்வினைப் பாவங்கள் அகலும். நோய், நொடிகள் நீங்கும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். 



Leave a Comment