பகைவர்கள் பற்றிய பயம் போக்கும் காலபைரவாஷ்டமி 


தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள். அதிலும் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி காலபைரவாஷ்டமி என்றே போற்றப்படுகிறது. காரணம் இந்த நாளில்தான் பிரம்மனின் அகந்தையை அழிக்க சிவபெருமான் தன் சக்திகளில் ஒன்றாக கால பைரவரைத் தோற்றுவித்தார். அகந்தையை அழிந்து உலகில் நன்மையை நிலைநாட்டும் சக்தியாகக் காலபைரவர் இன்றும் அருள்கிறார். 

காலபைரவாஷ்டமி நாளில் திருமகளின் எட்டு வடிவங்களும் பைரவரை வணங்குவதாக ஐதிகம். இந்த நாளில் சொர்ண கமல ரேகை அமைந்திருக்கும் சொர்ணாகர்ஷண பைரவ மூர்த்தியை வணங்குவது இன்னும் சிறப்பானது. ஸ்ரீ ஸ்ரீ பகவத்பாதாள் ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பைரவ வழிபாடு தொன்மையான பிணி தீர்க்கும் வழிபாடு. ராகு - கேதுவை முப்புரி நூலாக அணிந்து இருக்கும் பைரவ மூர்த்தி மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும் வடிவம் கொண்டவர். நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர்.

காலபைரவாஷ்டமி நாளில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அவருள் அடக்கம் என்பதால் இவரை வணங்கினால் உயர்வான வாழ்வினைப் பெறலாம். 21 அஷ்டமி நாளில் பைரவரை வணங்கிய எவரும் வாழ்வில் துன்பத்தை அடைவதே இல்லை என்பது ஐதிகம். காலத்தின் கடவுளான கால பைரவர் தலைவிதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். எனவே துன்பப்படும் எல்லாரும் கால பைரவாஷ்டமி நாளில் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லா வளங்களும் பெறலாம்.

பகைவர்கள் பற்றிய பயம், வாழ்க்கை பற்றிய பயம், நோய் பற்றிய பயம், வறுமை பற்றிய பயம் என எந்த வித பயம் என்றாலும் நாம் வணங்க வேண்டியது கால பைரவரையே. சிவாலயத்தின் காவலரான கால பைரவரே சிவனடியார்களின் காவலரும் ஆவார்.
 



Leave a Comment