லலிதையே போற்றிய விஷ்ணு சஹஸ்ரநாமம்


 

சொல்லுக்கு கலைமகள், வில்லுக்கோர் விஜயனைப் போல . ‘சஹஸ்ரநாமம்’ என்று சொன்னாலே அது விஷ்ணு சகஸ்ரநாமத்தைத் தான் குறிக்கும் . அந்த அளவிற்கு விஷ்ணு சகஸ்ரநாமம் பெருமை பெற்றது,மகத்துவம் வாய்ந்தது.

ஒரு முறை ஆதிசங்கரர் ,தம் சிஷ்யரை அழைத்து, புஸ்தக பாண்டாகாரத்திலிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தை எடுத்து வரும்படி ஆணையிட்டார். அதற்கு பாஷ்யம் செய்ய வேண்டும் என்று அவர் விருப்பப்பட்டார்.

சிஷ்யரும் ஆச்சாரியாரின் ஆணையை ஏற்று  அங்கிருந்து போனார். சற்று  நேரம் கழித்து அவர்  விஷ்ணு சஹஸ்ரநாமத்தை கொண்டு வந்து கொடுத்தார்.

ஆச்சாரியாரும் “நான் இதைக் கேட்கலையே...நான் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம் அல்லவா..?நீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கொண்டு வந்திருக்கியே...?” என்று சிஷ்யரைத் திரும்பவும் அனுப்பினார். திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்தது!

அப்போது சங்கரர் சிஷ்யரிடம், “நான் சொல்வது என்ன, நீ செய்வது என்ன...?”என்று கேட்டார்.

‘சுவாமி!  நான் என்ன செய்வேன்? அங்கே போய் லலிதா ஸஹஸ்ரநாமத்தை எடுக்கணும்னு கையை வைச்சா, ஒரு சின்ன கன்யா பெண் வந்து நின்னுண்டு, அதை வைச்சிடு,இதை எடுத்துண்டு போ'ன்னு சொல்கிறாள். நான் என்ன செய்வேன்...?” என்றார் சிஷ்யர்.

அப்போது ஆதிசங்கரர் தம் திருவுள்ளத்திலே இதைப் பற்றி தியானிக்க,அந்த அம்பிகையே இங்கு குழந்தையாய் வந்து, அந்த எம்பெருமான் நாராயணனுடைய திருநாமத்துக்கு பாஷ்யம் பண்ணும்படியாய் நம்மை நியமிக்கிறாள்..என்று தெரிந்துக் கொண்டார்.

அதன் பிறகு அன்னையின் கட்டளைப்படி விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணினார். இப்படி லலிதையே போற்றும்படியானது விஷ்ணு சஹஸ்ரநாமம்.

இவ்வளவு ஏற்றம் பெற்ற இந்த சஹஸ்ரநாமம் முதலில் சொல்லப்பட்டது யாராலே...?

அம்புப் படுக்கையில் இருந்தார் பீஷ்மர். தர்மபுத்திரரை அவரிடம் அழைத்துச் சென்றார் பகவான் கிருஷ்ணர்.

“அணையப் போகும் நெருப்பைப் போலே இருக்கிறார் பீஷ்மர். அவர் போனால், தர்மத்தைச் சொல்ல இங்கு யாரும் இல்லை, போ!  அவரிடம் தர்மத்தைப் பற்றி கேள்” என்று தர்மபுத்திரரை அனுப்பினார்.

பகவானே பீஷ்மர் அம்புப் படுக்கையிலே இருந்தபடி சொன்ன அந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கேட்டார். கீதை சொன்ன பகவானே  சஹஸ்ரநாமம் கேட்டார்.

 ‘பகவத் குண தர்ப்பணம்’என்ற விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தை பராசர பட்டர் செய்திருக்கிறார்.

 'பகவானுடைய திருக்கல்யாண குணங்களைக் காட்டக் கூடிய கண்ணாடி' என்று அதற்கு பொருள்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது இறைவனின் கல்யாண குணங்களை தெரிவிக்கும்படியான திரு நாமாக்கள். அனுதினம் இறைவன் சந்நிதியில் விளக்கேற்றி சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வந்தால் குடும்பத்திலே சண்டை, கலகம் இருக்காது. சர்வ சம்பத்தும் வந்து சேரும். துர்தேவதைகள் நம் இல்லத்தில் பிரவேசிக்காது என்கிறார்கள். கீதைக்குச் சமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை  நாமும் அனுதினமும் பாராயணம் செய்து இறைவனின் திருவடி தொழுவோம்.

ஓம் நமோ நாராயணாய .....



Leave a Comment