ஜோதி பிழம்பாக காட்சியளித்த அண்ணாமலையார்
கார்த்திகை தீப திருவிழவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. ஜோதி பிழம்பாக காட்சியளித்த அண்ணாமலையாரை அரோகரா முழக்கம் விண்ணை பிளக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
முன்னதாக மலை மீது மகா தீபம் ஏற்றுவதற்காக பிரம்மாண்ட கொப்பரை நேற்று சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. தீபம் ஏற்றுவதற்காக 3500 லிட்டர் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணிகளும் அடுத்தடுத்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன.
தீபத்திருவிழாவின் 10ஆம் நாளான இன்று அதிகாலை மூன்றரை மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன்பாக ஏகன் அனேகனாக மாறியும், அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் அருணாச்சலேஸ்வரர் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதனைதொடர்ந்து சரியாக மாலை 6 மணிக்கு சுவாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தர்கள் முழக்கமிட்டது எங்கும் எதிரொலித்தது. இதனையடுத்து வீடுகளிலும் அனைவரும் தயாராக வைத்திருந்த விளக்குகளை ஏற்றினர். கோவில்களில் மின் விளக்குகள் எரிய விடப்பட்டதை அடுத்து ஒளி வெள்ளம் பரவியது. வான வேடிக்கைகளும் நடைபெற்றன. 20 ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி இன்றைய தினம் உள்ளூர் பக்தர்கள் வெளியூர் பக்தர்கள் என 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
Leave a Comment